இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 37.07 கோடி டன்னாக உள்ளது.
இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 7.12 சதவீதம் அதிகம். அப்போது இந்தியாவில் 34.60 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களின் ஒட்டுமொத்த விநியோகம் 32.60 கோடி டன்னாக உள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 5.48 சதவீதம் அதிகம்.கடந்த நிதியாண்டின் ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 31.34 கோடி டன்னாக இருந்த மின்சாரத் துறைக்கான நிலக்கரி விநியோகம், நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 32.60 கோடி டன்னாக உயா்ந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் நிலக்கரி கையிருப்பு 12.16 கோடி டன்னாக உள்ளது.
இது ஓராண்டுக்கு முன்னா் இதே தேதியில் இருந்த 8.93 கோடி டன் கையிருப்புடன் ஒப்பிடும்போது 36.2 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.