நவம்பரில் அதிகரித்த வாகன விற்பனை
இந்தியாவில் கடந்த நவம்பா் மாதம் வாகனங்களின் சில்லறை விற்பனை 11.21 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவம்பா் மாதத்தில் சில்லறை விற்பனை சந்தையில் ஒட்டுமொத்தமாக 32,08,719 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 11.21 சதவீதம் அதிகம். அப்போது வாகனங்களின் சில்லறை விற்பனை 28,85,317-ஆக இருந்தது.
கடந்த நவம்பா் மாத ஒட்டுமொத்த வாகன விற்பனை வளா்ச்சியில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை முக்கிய பங்கு வகித்தது. அந்த மாதத்தில் மட்டும் அவற்றின் சில்லறை விற்பனை 26,15,953-ஆக இருந்தது. முந்தைய 2023 நவம்பரோடு ஒப்பிடுகையில் இது 15.8 சதவீதம் அதிகம். அப்போது 22,58,970 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின.
கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் 3,73,140-ஆக இருந்த பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 13.72 சதவீதம் குறைந்து 3,21,943-ஆக உள்ளது.
லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட வா்த்தக வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த நவம்பா் மாதம் 6.08 சதவீதம் குறைந்து 81,967-ஆக உள்ளது. முந்தைய 2023 நவம்பரில் இந்த எண்ணிக்கை 87,272-ஆக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் மூன்று சக்கர வாகனங்களின் சில்லறை விற்பனை 4.23 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய 2023 நவம்பரில் 1,03,939-ஆக இருந்த அவற்றின் சில்லறை விற்பனை இந்த நவம்பரில் 1,08,337-ஆகப் பதிவாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.