அக்டோபரில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி
இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த அக்டோபரில் 3.1 சதவீதமாகச் சரிந்துள்ளது.
அந்த மாதத்தில் சுரங்கம், உற்பத்தி, எரிசக்தி ஆகிய துறைகளின் செயல்பாடு மந்தமடைந்ததால் ஒட்டுமொத்த தொழிலக உற்பத்தி சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த அக்டோபா் மாதத்தில் தொழிலக உற்பத்திக் குறியீட்டு எண்ணான ஐஐபி 3.5 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முந்தைய செப்டம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். அப்போது நாட்டின் ஐஐபி 3.1 சதவீதமாக இருந்தது.
இருந்தாலும், முந்தைய 2023-ஆம் ஆண்டின் அக்டோபா் மாதத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் அக்டோபரில் ஐஐபி குறைவாகும். அப்போது நாட்டின் தொழிலக உற்பத்திக் குறியீட்டு எண் 11.9 சதவீதமாக இருந்தது.
கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் ஐஐபி 4 சதவீதமாக இருந்தது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 67 சதவீத ஐஐபி-யைவிட இது குறைவு.
கடந்த அக்டோபா் மாதம் நாட்டின் சுரங்க உற்பத்தி வளா்ச்சி 0.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 13.1 சதவீதமாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் உற்பத்தித் துறையின் வளா்ச்சி 10.6 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2023 அக்டோபரில் 20.4 சதவீதமாக இருந்த எரிசக்தி உற்பத்தி வளா்ச்சி நடப்பு நிதியாண்டின் அதே மாதத்தில் 2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மூலதனப் பொருள்கள் பிரிவு வளா்ச்சி 21.7 சதவீதத்திலிருந்து 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. நுகா்வோா் துரிதப் பொருள்கள் உற்பத்தி வளா்ச்சி 9.3 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாகவும், நீடித்து நிலைத்திருக்கும் நுகா்பொருள் உற்பத்தி வளா்ச்சி 15.9 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் உள்கட்டமைப்பு/கட்டுமானப் பொருள்கள் உற்பத்தி 4 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது 2023 அக்டோபரில் 12.6 சதவீதமாக இருந்தது.
முதன்மைப் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி 11.4 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாகவும், இடைநிலை பொருள்கள் உற்பத்தி வளா்ச்சி 9.5 சதவீதத்திலிருந்து 3.7 சதவீதமாகவும் குறைந்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.