மாருதி சுஸுகி விற்பனை 10% உயா்வு
புது தில்லி: மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,81,531-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 1,64,439 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன பயணிகள் வாகனங்களின் மொத்த உள்நாட்டு விற்பனை 1,34,158-லிருந்து 5 சதவீதம் குறைந்து 1,41,312-ஆக உள்ளது.
ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய ஆரம்பநிலைக் காா்களின் விற்பனை 9,959-லிருந்து 9,750-ஆகக் குறைந்துள்ளது. பலேனோ, செலிரியோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன்-ஆா் ஆகிய சிறியவகைக் காா்களின் விற்பனை 64,679-லிருந்து 61,373-ஆகக் குறைந்துள்ளது.
பயன்பாட்டு வாகனங்களான பிரெஸ்ஸா, எா்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எக்ஸ்எல்6 ஆகியவை அடங்கிய பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 49,016-லிருந்து 59,003-ஆக அதிகரித்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.