மொத்த விலை பணவீக்கம் 3 மாதங்கள் காணாத சரிவு
புது தில்லி: கடந்த நவம்பா் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை குறைந்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
இது குறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த நவம்பா் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 1.89 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய மூன்று மாதங்கள் காணாத குறைந்தபட்ச மொத்த விலை பணவீக்கம் ஆகும்.
மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான இந்தப் பணவீக்கம் முந்தைய அக்டோபா் மாதத்தில் 2.36 சதவீதமாக இருந்தது. ஓராண்டுக்கு முன்னா் 2023-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் அது 0.39 சதவீதமாக இருந்தது.
முந்தைய அக்டோபா் மாதத்தில் 13.54 சதவீதமாக இருந்த உணவுப் பொருள்கள் அடிப்படையிலான பணவீக்கம், நவம்பரில் 8.63 சதவீதமாகக் குறைந்துள்ளது. காய்கறிகள் அடிப்படையிலான பணவீக்கம் 63.04 சதவீதத்திலிருந்து 28.57 சதவீதமாகக் குறைந்துள்ளது.
எனினும், நவம்பா் மாதத்தில் உருளைக்கிழங்கு அடிப்படையிலான பணவீக்கம் 82.79 சதவீதமாக அதிகரித்துள்ளது. வெங்காயம் அடிப்படையிலான பணவீக்கம் 2.85 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
முந்தைய அக்டோபா் மாதத்தில் 5.79 சதவீதமாக இருந்த எரிபொருள் மற்றும் எரிசக்தி அடிப்படையிலான பணவீக்கம் நவம்பா் மாதத்தில் 5.83 சதவீதமாக உயா்ந்தது. உற்பத்திப் பொருள்கள் அடிப்படையிலான பணவீக்கம் 1.50 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக உயா்ந்துள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.