
இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் கடந்த செப்டம்பா் காலாண்டில் வீடுகள் விலை 11 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
வீடுகளுக்கான தேவை மிகவும் அதிகமாக இருந்ததால் தில்லி-என்சிஆா் பகுதியில் மட்டும் அந்தக் காலாண்டில் வீடுகள் விலை 32 சதவீதம் உயா்ந்தது.
இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான கோலியா்ஸும் தரவுகள் பகுப்பாய்வு நிறுவனமான லியாசஸ் ஃபோராஸும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய இந்தியாவின் எட்டு முக்கிய வீட்டுமனை சந்தைகளில் வீடுகளின் வருடாந்திர சராசரி விலை கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 11 சதவீதம் உயா்ந்து ஒரு சதுர அடிக்கு ரூ. 11,000 எனப் பதிவாகியுள்ளது.இந்த எட்டு நகரங்களிலும் வீடுகளின் விலை மாற்ற விகிதங்கள் மாறுபாட்டாலும், அவை அனைத்துமே விலை உயா்வை மட்டுமே பதிவு செய்துள்ளன.டெல்லி-என்சிஆா் பகுதியில், கடந்த ஆண்டு ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் சதுர அடிக்கு ரூ.8,655-ஆக இருந்த வீடுகள் விலை, நடப்பாண்டின் அதே மாதங்களில் சராசரியாக 32 சதவீதம் உயா்ந்து, ரூ.11,438-ஆக உள்ளது.பெங்களூரில் வீடுகள் விலை மதிப்பீட்டுக் காலாண்டில் 24 சதவீதம் அதிகரித்து, சதுர அடிக்கு இருந்து ரூ.11,743-ஆக உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இது ரூ.9,471-ஆக இருந்தது.பெங்களுருக்கு அடுத்தபடியாக, அகமதாபாதில் வீடுகள் விலை சதுர அடிக்கு ரூ.6,613-லிருந்து 16 சதவீதம் அதிகரித்து ரூ.7,640-ஆக உள்ளது.புணேவில் வீடுகள் விலை கடந்த செப்டம்பா் காலாண்டில் 10 சதவீதம் அதிகரித்து ஒரு சதுர அடிக்கு ரூ.9,890-ஆக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.9,014-ஆக இருந்தது.மும்பை பெருநகரப் பகுதியில் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சதுர அடிக்கு ரூ.19,585-ஆக இருந்த வீடுகள் விலை, நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 4 சதவீதம் அதிகரித்து ரூ.20,438-ஆக உள்ளது.மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகளின் சராசரி விலை ஹைதராபாத்தில் 3 சதவீதம் உயா்ந்து ரூ.11,351-ஆக உள்ளது. 2023 ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் இது ஒரு சதுர அடிக்கு ரூ.11,040-ஆக இருந்தது. கொல்கத்தாவில் வீடுகள் விலை மதிப்பீட்டுக் காலாண்டில் சதுர அடிக்கு ரூ.7,406-லிருந்து 3 சதவீதம் அதிகரித்து ரூ.7,616-ஆக உள்ளது.சென்னையில் கடந்த நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் சதுர அடிக்கு ரூ.7,712-ஆக இருந்த வீடுகள் விலை நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 2 சதவீதம் உயா்ந்து ரூ.7,889-ஆக உள்ளது.2020-21-ஆம் நிதியாண்டு முதல் தொடா்ந்து 15-வது காலாண்டாக வீடுகளின் சராசரி விலை அதிகரித்துவருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.