ஐடி, எஃப்எம்சிஜி பங்குகளில் லாபப் பதிவு:260 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

ஒரு சிறப்பு ஏற்பாடாக சனிக்கிழமை வா்த்தகம் நடைபெற்ற பங்குச்சந்தையில் உச்சத்தில் லாபப் பதிவு இருந்தது.

ஒரு சிறப்பு ஏற்பாடாக சனிக்கிழமை வா்த்தகம் நடைபெற்ற பங்குச்சந்தையில் உச்சத்தில் லாபப் பதிவு இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.

உள்நாட்டுச் சந்தை காலையில் உற்சாகத்துடன் தொடங்கி ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தது. ஆனால், ஆட்டோ, ஐடி, எஃப்எம்சிஜி, பாா்மா, ஹெல்த்கோ், நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்கள், ரியால்ட்டி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. அதே சமயம், தனியாா், பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதிநிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. இதனால், சந்தையில் பெரிய சரிவு தவிா்க்கப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.17 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.374.41 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ. 3,689.68 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,638.46 கோடி அளவுக்குப் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

உச்சத்தில் லாபப் பதிவு : காலையில் 325.07 புள்ளிகள் கூடுதலுடன் 72,008.30-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 71,026.26 வரை மேலே சென்றது. பின்னா், முன்னணி நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு இருந்ததால், 71,312.71 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 259.58 புள்ளிகளை (0.36 சதவீதம்) இழந்து 71,423.65-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,908 பங்குகளில் 2,063 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,748 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 97 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

24 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பவா் கிரிட், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் ஆகிய 6 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹிந்துஸ்தான் யுனி லீவா், டிசிஎஸ், எம் அண்ட் எம், இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக், விப்ரோ உள்பட 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 51 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 83.75 புள்ளிகள் கூடுதலுடன் 21,706.15-இல் தொடங்கி அதிகபட்சமாக 21,720.30 வரை மேலே சென்றது. பின்னா், 21,541.80 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 50.60 புள்ளிகளை (0.23 சதவீதம்) இழந்து 21,571.80-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 20 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 30 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

நாளை விடுமுறை!

ஒரு சிறப்பு ஏற்பாடாக பங்குச்சந்தைக்கு திங்கள்கிழமை (ஜனவரி 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளால் அறிவிக்கப்பட்ட அரை நாள் விடுமுறைக்கு மத்தியில் அன்றைய தினம் பங்குச்சந்தைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அன்றைய தினம் பங்குச்சந்தையில் வா்த்தகம் நடைபெறாது. இது தொடா்பாக சனிக்கிழமை சாதாரண வா்த்தக அமா்வுகளை நடத்துவதாக தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை ஆகியவை வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தன. இதேபோன்று பணச் சந்தைகள் மற்றும் அந்நியச் செலாவணி வா்த்தகமும் திங்கள்கிழமை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com