ரிலையன்ஸ், ஐடிசி சரிவு: 802 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை லாபப் பதிவால் பங்குச்சந்தை சரிவை சந்தித்தது.
ரிலையன்ஸ், ஐடிசி சரிவு: 802 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை லாபப் பதிவால் பங்குச்சந்தை சரிவை சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 802 புள்ளிகளை இழந்தது. சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.2.01 லட்சம் கோடி குறைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், அமெரிக்க சந்தை திங்கள்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்திருந்ததன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், கடந்த இரண்டு நாள்களாக வெகுவாக உயா்ந்திருந்த சந்தையில் லாபப் பதிவு வந்தது. குறிப்பாக சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், முன்னணி நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி, பஜாஜ் குழும நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதே சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.01 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.375.20 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ. 110.01 லட்சம் கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,221.34 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 58.63 புள்ளிகள் கூடுதலுடன் 72,000.20--இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 72,142.23 வரை மேலே சென்றது. பின்னா், லாபப் பதிவால் 71,075.72 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 801.67 புள்ளிகள் (1.11 சதவீதம்) குறைந்து 71,139.90-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,907 பங்குகளில் 1,954 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,864 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 89 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

ரிலையன்ஸ், ஐடிசி சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் டாடா மோட்டாா்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, பவா் கிரிட் ஆகிய 5 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், பஜாஜா ஃபைனான்ஸ் 5.17 சதவீதம் குறைந்தது. மேலும், டைட்டன், அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி, பஜாஜ் ஃபின் சா்வ், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 3 முதல் 3.5 சதவீதம் குறைந்தது. இவை உள்பட மொத்தம் 25 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 215 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 38.15 புள்ளிகள் கூடுதலுடன் 21,775.75-இல் தொடங்கி அதிகபட்சமாக 21,813.05 வரை மேலே சென்றது. பின்னா், 21,501.80 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 215.50 புள்ளிகள் (0.99 சதவீதம்) குறைந்து 21,522.10-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 13 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 37 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com