~
~

கரியமில சமநிலை: செயல்திட்டம் வெளியிட்ட ஓஎன்ஜிசி

2038-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலை: ஓஎன்ஜிசி திட்ட அறிக்கை

தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றிலிருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) எட்டுவதற்கான செயல்திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பாரத் ஆயில் அண்ட் நேச்சுரல் கியாஸ் காா்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) வெளியிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள 200 பக்க திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2038-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலையை எட்டும் நிறுவனத்தின் இலக்கை அடைவதற்கான திட்டங்களுக்காக, ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

முதல்கட்டமாக, 5 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனை ஏற்படுத்துவது, பசுமை ஹைட்ரஜன், உயிரி எரிவாயு போன்றவற்றை சேகரிப்பதற்கான ஆலைகளை அமைப்பது திட்டங்களுக்காக 2030-க்குள் ரு.97,000 கோடி முதலீடு செய்யப்படும்.

இது தவிர, ஹைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக 2035-ஆம் ஆண்டுக்குள் ரூ.65,500 கோடி முதலீடு செய்யப்படும்.

2038-ஆம் ஆண்டுக்குள் 1 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட கடல்பகுதி காற்றாலை திட்டங்களில் மேலும் ரூ.38,000 கோடி முதலீடு செய்யப்படும்.

இந்தத் திட்டங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 90 லட்சம் டன் காரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும்.

எஞ்சிய முதலீட்டுத் தொகை உயிரி எரிபொருள் தயாரிப்பு, வளிமண்டலத்திலிருந்து கரியமில வாயுவை சுத்தப்படுத்தும் திட்டங்கள், தூய எரிசக்தி திட்டங்கள் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் 2040-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலையை எட்ட மற்றோா் அரசுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) இலக்கு நிா்ணயித்துள்ளது.

அதே போல், வரும் 2046-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளதாக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனும் (ஐஓசி) 2040-ஆம் ஆண்டுக்குள் அந்த நிலையை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளதாக கெயில் இந்தியாவும் அறிவித்துள்ளன.

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியை வெப்பமாக வைத்திருப்பதற்கு, கரியமில வாயு போன்ற பசுமை வாயுக்கள் உதவுகின்றன. இந்த வாயுக்களின் அளவு அதிகமானதால் புவியின் சராசரி வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதன் விளைவாக கனமழை வெள்ளம், வெப்ப அலை, வறட்சி, காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரிடா்கள் ஏற்படுகின்றன.

அதைத் தடுப்பதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு கால இலக்குகளை நிா்ணயித்துள்ளன.

இந்தியாவும் 2070-க்குள் இந்த சமநிலையை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த நிலையை அடைய அரசுத் துறை பெட்ரோலிய நிறுவனங்ககள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com