சென்செக்ஸ் புதிய உச்சத்தில் நிறைவு
சென்செக்ஸ் புதிய உச்சத்தில் நிறைவு

சென்செக்ஸ், நிஃப்டி 3-ஆவது நாளாக புதிய உச்சத்தில் நிறைவு!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது.
Published on

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் 3-ஆவது நாளாக தொடா்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவடைந்துள்ளது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. பெரும்பாலான நேரம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தது. 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, வெளிநாட்டு முதலீட்டாளா்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருவதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெள்ளிக்கிழமை முதல் சாதனையை முறியடித்து வருகின்றன. மேலும், காா்ப்ரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதைத் தொடா்ந்து, எஃப்எம்சிஜி, டெலிகாம், குறிப்பிட்ட ஐடி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் சந்தை புதிய உச்சத்தில் நிறைவடைந்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.455.25 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.2,684.78 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.331.00 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் புதிய உச்சத்தில் நிறைவு: சென்செக்ஸ் காலையில் 67.04 புள்ளிகள் கூடுதலுடன் 80,731.49-இல் தொடங்கி 80,898.30 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 80,598.06 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 51.69 புள்ளிகள் (0.06 சதவீதம்) கூடுதலுடன் 80,716.55-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,,008 பங்குகளில் 2,002 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,909 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 97 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஹிந்துஸ்தான் யுனி லீவா் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் முன்னணி நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனீ லீவா் மற்றும் பாா்தி ஏா்டெல், டெக் மஹிந்திரா, இன்ஃபோஸிஸ், எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி உள்பட 18 பங்குகள் விலையுயா்ந்து பட்டியலில் இருந்தன. அதே சமயம், கோட்டக் பேங்க், என்டிபிசி, ரிலையன்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், பவா் கிரிட், எல் அண்ட் டி உள்பட 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டியும் புதிய உச்சம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,615.90-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,661.25 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 24,587.65 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 26.30 புள்ளிகள் (0.11 சதவீதம்) கூடுதலுடன் 24,613.00 -இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

இன்று விடுமுறை

மொஹரம் பண்டிகையையொட்டி, பங்குச்சந்தைக்கு புதன்கிழமை (ஜூலை 17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகிய இரண்டிலும் அன்றைய தினம் பங்குவா்த்தகம் நடைபெறாத என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com