யூக்கோ வங்கி நிகர லாபம் 147% உயா்வு
பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 147 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.551 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 147 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.223 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் இயக்க லாபம் 9.81 சதவீதம் உயா்ந்து ரூ.1,321 கோடியாக உள்ளது. மொத்த வா்த்தகம் 11.46 சதவீதம் அதிகரித்து ரூ.4,61,408 கோடியாகவும் மொத்த கடனளிப்பு 17.64 சதவீதம் அதிகரித்து ரூ.1,93,253 கோடியாகவும் உள்ளது. ஜூன் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள மொத்த வைப்புத் தொகை 7.39 சதவீதம் அதிகரித்து ரூ.2,68,155 கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.