
புதுதில்லி: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், அனல் மின் நிலையம் அமைக்க, அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.3,500 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளதாக பெல் நிறுவனம் தெரிவித்ததையடுத்து அதன் பங்குகள் 9 சதவிகிதம் உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் பெல் பங்கின் விலையானது 14.57 சதவிகிதம் அதிகரித்து ரூ.292.45 ஆக இருந்தது. பிறகு 8.97 சதவிகிதம் அதிகரித்து, ரூ.278.15 ரூபாயாக முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் 14.48 சதவிகிதம் உயர்ந்து ரூ.292.35 ஆக உள்ளது. பிறகு இந்த பங்கின் விலையானது 9 சதவிகிதம் அதிகரித்து ரூ.278.50 ஆக முடிவடைந்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.7,973.93 கோடியாக அதிகரித்து ரூ.96,853.59 கோடி ரூபாயாக உள்ளது.
இதனையடுத்து அதானி பவர் பங்குகள் பிஎஸ்இயில் 8.79 சதவிகிதம் அதிகரித்து ரூ.790 ஆக இருந்தது. பிறகு 3.17 சதவிகிதம் உயர்ந்து ரூ.749.20 ஆக நிலைபெற்றது.
சூப்பர் கிரிட்டிகல் டெக்னாலஜி அடிப்படையிலான 2x800 மெகாவாட் மின் திட்டத்திற்கான உபகரணங்கள் வழங்கல் மற்றும் நிறுவுதல் மற்றும் கமிஷனிங் மேற்பார்வை ஆகியவற்றிற்கான ஒப்பந்தத்தில் ஜூன் 5 ஆம் தேதி கையெழுத்திட்டுள்ளது என்று பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் இன்று பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திருச்சி மற்றும் ஹரித்வார் ஆலைகளில் பாய்லர் மற்றும் டர்பைன் ஜெனரேட்டர் தயாரிக்கப்படும் என்று பெல் தெரிவித்துள்ளது. இந்த ஆர்டரின் மொத்த மதிப்பு ஜிஎஸ்டி தவிர்த்து ரூ.3,500 கோடியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.