சென்செக்ஸ் 906 புள்ளிகள் சரிவு: ஒரே நாளில் நஷ்டம் ரூ.13.53 லட்சம் கோடி

சென்செக்ஸ் 906 புள்ளிகள் சரிவு: ஒரே நாளில் நஷ்டம் ரூ.13.53 லட்சம் கோடி

இந்த வாரத்தின் 3-ஆவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 906 புள்ளிகளை இழந்தது. ஒரே நாளில் சந்தை மதிப்பு ரூ.13.53 லட்சம் கோடி குறைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், தொடர்ந்து முன்னணி பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்ததால் சந்தை எதிர்மறையாகச் சென்றது. எஃப்எம்சிஜி பங்குகள் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்த நிலையில், ஆட்டோ, மெட்டல், பொதுத்துறை வங்கிகள், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் , மீடியா பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டதால் கடும் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்குவர்த்தக நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.13.53 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.372.11 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.73.12 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,358.18 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

சென்செக்ஸ் கடும் சரிவு:

காலையில் 325.44 புள்ளிகள் கூடுதலுடன் 73,993.40-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 74,052.75 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னர், 72,515.71 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 906.07 புள்ளிகள் (1.23 சதவீதம்) குறைந்து 72,761.89-இல் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் உச்சத்திலிருந்து 501.52 புள்ளிகள் உயர்ந்திருந்த சென்செக்ஸ், பின்னர் 1,537.04 புள்ளிகளை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,976 பங்குகளில் 400 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 3,516 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 60 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

பவர்கிரிட், என்டிபிசி கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் பவர்கிரிட் (7.28 சதவீதம்), என்சிபிசி (6.67 சதவீதம்), டாடா ஸ்டீல் (5.87 சதவீதம்), டாடா மோட்டார்ஸ் (4.28 சதவீதம்), டைட்டன் (3.27 சதவீதம்) , ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (3.08 சதவீதம்) உள்பட 25 பங்குகள் சரிவைச் சந்தித்தன. அதே சமயம், ஐடிசி (4.49 சதவீதம்) மற்றும் ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய 5 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.

நிஃப்டி 338 புள்ளிகள் சரிவு:

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 338.00 (1.51சதவீதம்) குறைந்து 21,997.70-இல் முடிவடைந்தது. வர்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,4446.75 வரை மேலே சென்ற நிஃப்டி, பின்னர் 21,905.65 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 6 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 43 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com