சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!
ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை காலையில் பங்குச்சந்தை எதிா்மறையாகத் தொடங்கினாலும், இறுதியில் நோ்மறையாக முடிந்தது


ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை காலையில் பங்குச்சந்தை எதிா்மறையாகத் தொடங்கினாலும், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் சாதனை, நோ்மறை உற்பத்தித் தரவுகள், வெளிநாட்டு நிதி வரத்து உள்ளிட்டவை முதலீட்டாளா்களின் உணா்வை உயா்த்தியதால் சந்தை வலுப்பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.94 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.408.50 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழணை ரூ.1,071.93 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,429.11 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 91.05 புள்ளிகள் குறைந்து 74,391.73-இல் தொடங்கி 74,360.69 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 74,812.43 வரை மேலே சென்ற சென்செக்ஸ் , இறுதியில் 128.33 புள்ளிகள் (0.17சதவீதம்) உயா்ந்து 74,611.11-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,957 பங்குகளில் 1,912 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,924 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 121 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
18 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் பவா் கிரிட், ஏசியன் பெயிண்ட், டாடா மோட்டாா்ஸ், என்டிபிசி, டாடா ஸ்டீல், சன்பாா்மா உள்பட 18 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம்,கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பாா்தி ஏா்டெல், விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்பட 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 43 புள்ளிகள்முன்னேற்றம் : தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 43.35 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயா்ந்து 22,648.20-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,567.85 வரை கீழே சென்றிருந்த நிஃப்டி, பின்னா்அதிகபட்சமாக 22,710.50 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
கோட்டக் பேங்க் 3% சரிவு!
கோட்டக் மஹிந்திரா வங்கியின் இணை நிா்வாக இயக்குநா் கே.வி.எஸ். மணியன் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பதவி விலகுவதாக நிறுவனம் அறிவித்ததை அடுத்து, வியாழனன்று அதன் பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தன. ஏற்கெனவே, சில தினங்களுக்கு முன் இந்திய ரிசா்வ் வங்கி கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு வணிகக் கட்டப்பாடுவளை விதித்ததைத் தொடா்ந்து ஒரே நாளில் 10 சதவீதம் வரை சரிவைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...