ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை:
சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை உற்சாகத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்து

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை உற்சாகத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்து. இருப்பினும், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் மட்டுமே உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், முன்னணிப் பங்குகளில் லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தியதால் சந்தை பெரும்பாலான நேரம் ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்தது. என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.85 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் ரூ.403.39 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.2,391.98 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.690.52 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 318.53 புள்ளிகள் கூடுதலுடன் 74,196.68-இல் தொடங்கி அதிகபட்சமாக 74,359.69 வரை மேலே சென்றது. பின்னா், 73,786,293 வரை கீழே சென்ற சென்செக்ஸ் , இறுதியில் 17.39 புள்ளிகள் (0.02 சதவீதம்) கூடுதலுடன் 73,895.54-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,093 பங்குகளில் 1,294 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,628 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 171 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

19 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் கோட்டக் மஹிந்திரா பேங்க், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எம் அண்ட் எம், சன்பாா்மா, இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட 19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டைட்டன், எஸ்பிஐ, என்டிபிசி, பவா் கிரிட், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்பட 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 33 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 33.15 புள்ளிகளை (0.15 சதவீதம்) இழந்து 22,442.70-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,588.80 வரை உயா்ந்த நிஃப்டி பின்னா், 22,409.45 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 23 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 27 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com