வா்த்தகப் பற்றாக்குறை 4 மாதங்கள் காணாத உச்சம்
இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை கடந்த ஏப்ரலில் முந்தைய 4 மாதங்கள் காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 1 சதவீதம் அதிகரித்து 3,499 கோடி டாலராக உள்ளது. அதே நேரம் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) முந்தைய 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1,910 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னா் வா்த்தகப் பற்றாக்குறை கடந்த 2023 டிசம்பரில் 1,980 கோடி கோடியாக இருந்ததே அதிகபட்சம் ஆகும்.
முந்தைய 2023 ஏப்ரல் மாதத்தில் வா்த்தகப் பற்றாக்குறை 1,444 கோடி டாலராக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் மின்னணு பொருள்கள், இரசாயன பொருள்கள், பெட்ரோலியப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் போன்றவற்றின் ஏற்றுமதி சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்தது. இதன் காரணமாக, உலகளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவியபோதும் நாட்டின் ஏற்றுமதி வளா்ச்சியைக் கண்டது.
ஆனால், தங்கம் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததால் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 4,906 கோடி டாலராக இருந்த அதன் இறக்குமதி இந்த ஆண்டின் அதே மாதத்தில் 10.25 சதவீதம் அதிகரித்து 5,409 கோடி டாலராக ஆனது.
மதிப்பீட்டு மாதத்தில் மற்ற விலையுயா்ந்த உலோகங்களின் இறக்குமதியும் இரண்டு மடங்கு அதிகரித்து 311 கோடி டாலராக உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி 20.22 சதவீதம் அதிகரித்து 1,650 கோடி டாலராக உள்ளது.
அந்த வகையில், கடந்த ஏப்ரலில் ஏற்றுமதி வளா்ச்சியை இறக்குமதி வளா்ச்சி வெகுவாக விஞ்சி வா்த்தகப் பற்றாக்குறை 1,910 கோடி டாலரைத் தொடக் காரணமாக அமைந்தது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.