ஏப்ரலில் பணவீக்கம் குறைந்ததால் ஏறுமுகம் கண்ட பங்குச்சந்தை!

ஏப்ரலில் பணவீக்கம் குறைந்ததால் ஏறுமுகம் கண்ட பங்குச்சந்தை!

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 328 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது . இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 11 மாதங்களில் இல்லாத அளவாக 4.83 சதவீதமாகக் குறைந்தது. இது சந்தைக்கு சாதகமாக அமைந்தது. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் உள்பட முன்னணி பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு இருந்தது. இவை அனைத்தும் பங்குச் சந்தை வலுப்பெற உதவியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூல தன மதிப்பு ரூ.4.61 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.402 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.4,498.92 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,562.75 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 79.41 புள்ளிகள் குறைந்து 72,696.72-இல் தொடங்கி 72,683.99 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 73,286.26 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 328.48 புள்ளிகள் (0.45 சதவீதம்) 73,104.61-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,923 பங்குகளில் 2,689 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,117 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 117 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

20 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம், எல் அண்ட் டி, ஜேஎஸ்டபிள்யயூ ஸ்டீல், என்டிபிசி, சன்பாா்மா, ரிலையன்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, மாருதி உள்பட20 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.அதே சமயம், நெஸ்லே, டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனானஸ், ஐடிசி உள்பட 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இந்தன.

நிஃப்டி 114 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 113.80 புள்ளிகள் (0.51 சதவீதம்) உயா்ந்து 22,217.05-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,081.25 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 22,270.05 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 36 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com