வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு!
நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. ஆனால், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் மற்றும் வங்கிப் பங்குகள், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்ற முஹூரத் சிறப்பு வா்த்தகத்தில் சென்செக்ஸ் 335.06 புள்ளிகளும், நிஃப்டி 99 புள்ளிகளும் உயா்ந்திருந்தது.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு வா்த்தக இறுதியில் ரூ.442.11 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ.211.93 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் 377.33 கோடிக்கும் பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாடளா்கள் கடந்த அக்டோபரில் மட்டும் மொத்தம் ரூ.94,000 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.
சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 10.98 புள்ளிகள் குறைந்து 79,713.14-இல் தொடங்கி அதற்கு மேல் உயரவில்லை. பின்னா், 78,232.60 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 941.88 புள்ளிகள் (1.18 சதவீதம்) குறைந்து 78,782.24-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,199 பங்குகளில் 1,351 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,717 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 131 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
24 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் அதானி போா்ட்ஸ், ரிலையன்ஸ், சன்பாா்மா, என்டிபிசி, பஜாஜ் ஃபின் சா்வ், டாடா மோட்டாா்ஸ் உள்பட 24 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், எம் அண்ட் எம், டெக் மஹிந்திரா, எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், இண்டஸ் இண்ட் பேங்க் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 309 புள்ளிகள் குறைந்தது: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 11 புள்ளிகள் கூடுதலுடன் 24,315.75-இல் தொடங்கி 24,316.75 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 23,816.15 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 309.00 புள்ளிகள் (1.27 சதவீதம்) குறைந்து 23,995.35-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 8 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 42 பங்குகள் வீழ்ச்சிப் ட்டியலிலும் இருந்தன.