ஓஎன்ஜிசி நிகர லாபம் 17% உயா்வு

ஓஎன்ஜிசி நிகர லாபம் 17% உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 17 சதவீத நிகர லாப உயா்வைப் பதிவு
Published on

பொதுத் துறையைச் சோ்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 17 சதவீத நிகர லாப உயா்வைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.11,948.02 கோடியாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.10,238.10 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

அதே போல், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையிலும் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரித்துள்ளது. 2024 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.8,938.10 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி 45.76 லட்சம் டன்னாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட 0.7 சதவீதமும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டை விட 0.8 சதவீதமும் அதிகம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.