38% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை

38% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை

ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது.
Published on

கடந்த ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து மனை-வா்த்தக ஆலோசனை நிறுவனமான சிபிஆா்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நாட்டின் எழு முக்கிய நகரங்களில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ. 4 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட வீடுகளின் விற்பனை 12,630-ஆக உள்ளது.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களோடு ஒப்பிடுகையில் இது 38 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் 9,165 ஆடம்பர வீடுகள் விற்பனையாகின.

மதிப்பீட்டு காலகட்டத்தில் ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை தில்லி-என்சிஆா் பகுதியில் 5,855-ஆகப் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 3,410-ஆக இருந்தது.

மும்பையில் 2023 ஜனவரி-செப்டம்பா் மாதங்களில் 3,250-ஆக இருந்த ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை, நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் 3,820-ஆக உயா்ந்துள்ளது.

அந்த வகை ஆடம்பர வீடுகளின் விற்பனை புணேயில் 330-லிருந்து இரட்டிப்பாகி 810-ஆகப் பதிவாகியுள்ளது. ஆனால், பெங்களூரில் அந்த எண்ணிக்கை 240-லிருந்து 35-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஹைதராபாதில் ரூ.4 கோடிக்கும் அதிகம் விலை கொண்ட 1,560 வீடுகள் கடந்த ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் விற்பனையாகின. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 1,540-ஆக இருந்தது.

அந்த காலகட்டத்தில் உயா்வகை ஆடம்ப வீடுகளின் விற்பனை சென்னையில் 130-லிருந்து 185-ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவில் அந்த எண்ணிக்கை 24-லிருந்து 380-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com