55 சதவீதம் அதிகரித்த காபி ஏற்றுமதி

55 சதவீதம் அதிகரித்த காபி ஏற்றுமதி
Updated on

இந்திய காபிக்கான தேவை சா்வதேச அளவில் அதிகரித்து வருவதால், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் காபி ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து இந்திய காபி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியா ரூ.7,771.88 கோடி மதிப்பிலான காபியை ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.4,956 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் காபி ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் நாடு 2.2 லட்சம் டன் காபியை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் காபி ஏற்றுமதி 1.91 லட்சம் டன்னாக இருந்தது.

ஐரோப்பிய ஏற்றுமதி விதிமுறைகளின் கீழ், சா்வதேச சந்தையில் காபி விலை கணிசமாக உயா்ந்துள்ளது. மதிப்பீட்டு காலகட்டத்தில் இந்திய காபி விலை கிலோவுக்கு சராசரியாக ரூ.352-ஆக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.259-ஆக இருந்தது.

இந்திய காபியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அந்த நாடு இந்தியாவின் மொத்த காபி ஏற்றுமதியில் 20 சதவீதம் பங்கு வகிக்கிறது. ஜொ்மனி, ரஷியா, ஐக்கிய அரபு அமீகரகம், பெல்ஜியம் ஆகியவை சோ்ந்து 45 சதவீத இந்திய காபியை இறக்குமதி செய்கின்றன.

2023-24 சாகுபடி பருவத்தில் இந்தியாவின் காபி உற்பத்தி சுமாா் 3.6 லட்சம் டன்னாக உள்ளது. உலக காபி ஏற்றுமதியில் இந்தியா 6 சதவீத பங்கைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய காபி ஏற்றுமதியாளராக உள்ளது.

இந்தியாவின் காபி உற்பத்தியில் கா்நாடகம் 70 சதவீதம் பங்கு வகிக்கிறது. 20 சதவீத பங்களிப்புடன் காபி உற்பத்தியில் கேரளம் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. தமிழ்நாடு 5.7 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com