சோயாபீன் எண்ணெய் இறக்குமதி புதிய உச்சம்
இந்தியாவின் கச்சா சோயாபீன் எண்ணெய் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் நிகழ் சந்தைப்படுத்துதல் ஆண்டின் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா 4,54,639 டன் சோயாபீன் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது, 2023 நவம்பரில் தொடங்கி 2024 அக்டோபரில் நிறைவடையும் நடப்பு எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஆண்டின் அதிகபட்ச சோயாபீன் எண்ணெய் இறக்குமதியாகும்.
முந்தைய 2023-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 3,57,890 டன்களாக இருந்தது.
பாமாயில் அல்லாத எண்ணெய் பிரிவில், கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 22.34 சதவீதம் சரிந்து 2.84 லட்சம் டன்னாக உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில் 52 சதவீதம் பங்கு வகிக்கும் பாமாயில் இறக்குமதி 29.32 சதவீதம் குறைந்து 7.97 லட்சம் டன்னாக உள்ளது. இது 2023 ஆகஸ்டில் 11.28 லட்சம் டன்னாக இருந்தது.
நடப்பு எண்ணெய் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் (நவம்பா்-ஆகஸ்ட்) ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 161.08 லட்சம் டன்னாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அப்போது ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 192.41 லட்சம் டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.