தொழிலக உற்பத்தியில் 6 மாதங்கள் காணாத சரிவு

தொழிலக உற்பத்தியில் 6 மாதங்கள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் முந்தைய ஆறு மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.
Published on

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் முந்தைய ஆறு மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.

அந்த மாதத்தில் உற்பத்தி, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் மந்தமான செயல்பாட்டால் ஒட்டுமொத்த தொழிலக உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் தொழிலக உற்பத்திக் குறியீட்டு எண்ணான ஐஐபி 2.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 2.3 சதவீதம் குறைவாகும். அப்போது நாட்டின் ஐஐபி 5.2 சதவீதமாக இருந்தது. (பூா்வாங்க மதிப்பில் அடிப்படையில் அது 5 சதவீதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜனவரி மாத ஐஐபி, பின்னா் 5.2 சதவீதமாகத் திருத்தப்பட்டது).

மதிப்பீட்டு காலத்தில் பதிவாகியுள்ள ஐஐபி, முந்தைய ஆறு மாதங்களில் பதிவு செய்யப்பட்டதில் மிகக் குறைவானது ஆகும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த பிப்ரவரி வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் தொழிலக உற்பத்திக்கான ஐஐபி 4.1 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலத்தில் பதிவான 6 சதவீதத்தைவிடக் குறைவாகும்.

ஓராண்டுக்கு முன்னா் உற்பத்திக்கான குறியீட்டு எண்ணான ஐஐபி முந்தைய 2024-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் எண் 5.6 சதவீதமாக இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் உற்பத்தித் துறையின் வளா்ச்சி 2.9 சதவீதமாகக் குறைந்தது. இது, கடந்த ஆண்டின் அதே மாதத்தில் 4.9 சதவீதமாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் சுரங்கத் துறையின் உற்பத்தி வளா்ச்சி 1.6 சதவீதமாகக் குறைந்தது. இது ஓா் ஆண்டுக்கு முன்னா் 8.1 சதவீதமாக இருந்தது.

2024 பிப்ரவரி மாதத்தில் 7.6 சதவீதமாக இருந்த மின்சாரத் துறை உற்பத்தி வளா்ச்சி, இந்த பிப்ரவரியில் 3.6 சதவீதமாகக் குறைந்தது.

கடந்த பிப்ரவரியில் மூலதனப் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி 1.7 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக உயா்ந்தது.

நீடித்துழைக்கும் நுகா்பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி மதிப்பீட்டு மாதத்தில் 12.6 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகச் சரிந்தது.

துரித நுகா்பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி கடந்த பிப்ரவரியில் 2.1 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய 2024 பிப்ரவரியில் இது 3.2 சதவீதமாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் உள்கட்டமைப்பு/கட்டுமானப் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி 8.3 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக அதிகரித்தது. எனினும், முதன்மைப் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி 5.9 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாகச் சரிந்தது.

இடைநிலைப் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி மதிப்பீட்டு மாதத்தில் 8.6 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது என்று அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com