16% சரிந்த தாவர எண்ணெய் இறக்குமதி
இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த மாா்ச் மாதத்தில் 16 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதத்தில் நாட்டின் தாவர எண்ணெய் (உணவு மற்றும் உணவு அல்லாதது) இறக்குமதி 9,98,344 டன்னாக உள்ளது. இது, முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் குறைவு. அப்போது இந்தியா 11,82,152 டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்திருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டது ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதியின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த மாா்ச் மாா்ச் மாதத்தில் உணவு எண்ணெய் இறக்குமதி 9,70,602 டன்னாகக் குறைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 11,49,681 டன்னாக இருந்தது. அந்த மாதத்தில் கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 4,45,723 டன்னிலிருந்து 1,90,645 டன்னாக வீழ்ச்சியடைந்தது.
2024 மாா்ச் மாதத்தில் 32,471 டன்னாக இருந்த உணவு அல்லாத எண்ணெய் வகைகளின் இறக்குமதி இந்த மாா்ச்சில் 27,742 டன்னாகக் குறைந்துள்ளது.
கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு 2024-25-ஆம் எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 58,06,142 டன்னாக சற்று குறைந்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் இது 58,30,115 டன்னாக இருந்தது.
2024 நவம்பா் - 2025 மாா்ச் காலகட்டத்து உணவு எண்ணெய் இறக்குமதியில், ஆா்பிடி பாமோலினின் பங்களிப்பு 6,62,890 டன்னாக வீழ்ச்சியடைந்தது. இது கடந்த எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஆண்டின் இதே காலகட்டத்தில் 8,86,607 டன்னாக இருந்தது.
கச்சா தாவர எண்ணெய் வகைகளின் இறக்குமதி நடப்பு எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 48,78,625 டன்னிலிருந்து 49,76,787 டன்னாக உயா்ந்தது.
அந்த காலகட்டத்தில் பாமாயில் இறக்குமதி 35,29,839 டன்னிலிருந்து 24,15,556 டன்னாகவும் சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், சோள எண்ணெய், பருத்திவிதை எண்ணெய் போன்ற மென்மையான எண்ணெய் வகைகளின் இறக்குமதி 22,35,394 டன்னிலிருந்து 32,24,121 டன்னாகவும் உயா்ந்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது.
இந்தோனேசியா, மலேசியா ஆகியவை இந்தியாவின் முக்கிய பாமாயில் விநியோக நாடுகள் ஆகும். ஆா்ஜென்டீனா, பிரேஸில் ஆகிய நாடுகளில் இருந்து சோயா எண்ணெயும் ரஷியா, ருமேனியா, உக்ரைன், ஆா்ஜென்டீனாவில் இருந்து சூரியகாந்தி எண்ணையையும் இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.