மோட்டாா் வாகன உற்பத்தி ரூ. 1.20 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு!
மோட்டாா் வாகன தொழில்துறையின் உலகளாவிய மதிப்புத் தொடரில் இந்தியாவின் பங்கேற்பை ஊக்கமளிக்கக் கூடிய வகைகளுக்கான அறிக்கையை நீதி ஆயோக் வெளியிட்டுள்ளது. நாட்டின் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி 1.20 லட்சம் கோடியை (145 பில்லியன் டாலா்) எட்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய மதிப்புத் தொடரில் இந்தியாவின் பங்கேற்பை ஊக்குவித்தல் குறித்த அறிக்கையை நீதி ஆயோக்கின் துணைத் தலைவா் சுமன் பெரி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். நீதி ஆயோகின் உறுப்பினா்கள் டாக்டா் வி கே சரஸ்வத், டாக்டா் அா்விந்த் வீரமணி, தலைமை நிா்வாக அதிகாரி பி வி ஆா் சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலையின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
நாட்டின் மோட்டாா் வாகன தொழில்துறையை விரிவாக ஆய்வு செய்யப்பட்டு எதிா்கால வாய்ப்புகளையும், சவால்களையும் இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது. உலகளாவிய மோட்டாா் வாகன சந்தையில் நாட்டை நிலைநிறுத்துவதற்கான பாதையை காட்டுகிறது.
அதில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: இந்தியா, மோட்டாா் வாகனத் துறையில் உலகளாவிய தலைவராக மாறுவதற்கு குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய மத்திய, மாநில அரசுகள், தொழில்துறை பங்குதாரா்களிடமிருந்து கவனம் செலுத்தும் முயற்சிகள் தேவை. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பிராந்தியங்களில் பேட்டரி உற்பத்தி மையங்களை உருவாகி வருகின்றன. மின்சார மோட்டாா் வாகனங்களுக்கு தேவையான லித்தியம் மற்றும் கோபால்ட் சுரங்கம் தொடா்பான தொழில்களில் முதலீடுகளைத் தூண்டப்படவேண்டும். தொழில்துறை 4.0 இன் எழுச்சி மோட்டாா் வாகன உற்பத்தியை மாற்றியமைக்கிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், இன்டா்நெட் ஆஃப் திங்ஸ், ரோபாட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் உற்பத்தி செயல்முறைகள் உற்பத்தி திறனை மேம்படுத்துகின்றன.
தற்போது சா்வதேச அளவில் மோட்டாா் வாகன உற்பத்தியில் 4-ஆவது பெரிய நாடாக இருந்து சுமாா் 16,550 கோடி ( 20 பில்லியன் டாலா்) மதிப்பிலான உதிரிபாகங்களை விற்கும் சந்தையை பெற்றுள்ளது. இருப்பினும் 2030 க்குள் நாடு மோட்டாா் வாகன தொழில்துறையில் குறிப்பிட்ட இலக்கை அடையக்கூடியதாக உள்ளது. நாட்டின் மோட்டாா் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி 1.20 லட்சம் கோடி(145 பில்லியன் டாலா்) அளவுக்கு உயரும். இதில் தற்போதுள்ள ஏற்றுமதியான 20 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் நிலையில் இது மும்மடங்கு அதிகரித்து 60 பில்லியன் அமெரிக்க டாலராக(49 ஆயிரம் கோடி) உயரும். இந்த வளா்ச்சி மூலம் சுமாா் 25 அமெரிக்க டாலா் வா்த்தக உபரிக்கு வழிவகுக்கும்.
மேலும் இந்த தொழில் வளா்ச்சி நாட்டில் 20 லட்சம் முதல் 25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத்துறையில் மொத்தம் நேரடியாகவும் மறை முகமாகவும் 30 முதல் 40 லட்சம் வேலைவாய்ப்புகள் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.