பிண்ணாக்கு ஏற்றுமதி 21% சரிவு
இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் அளவின் அடிப்படையில் 11 சதவீதம் சரிந்து 43,42,498 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில் 21 சதவீதம் குறைந்து ரூ.12,171 கோடியாகவும் உள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் ராப்சீட் பிண்ணாக்கு மற்றும் ஆமணக்கு விதை பிண்ணாக்கு ஆகியவற்றின் ஏற்றுமதி கணிசமாகக் குறைந்ததால் ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டில்
நாட்டின் பிண்ணாக்கு ஏற்றுமதி 43,42,498 டன்னாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் இது 48,85,437 டன்னாக இருந்தது. இது 11 சதவீதம் குறைவாகும்.
மதிப்பின் அடிப்படையில், ஏற்றுமதி 2024-25-ஆம் நிதியாண்டில் 12,171 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.15,368 கோடியாக இருந்தது.
இந்தியாவின் பிண்ணாக்கு வகைகள் வங்கதேசம், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2024-25 நிதியாண்டில் வங்கதேசத்துக்கு 7.42 லட்சம் டன் பிண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டில் 8,92,659 டன்னாக இருந்ததை விட 17 சதவீதம் குறைவாகும். தென் கொரியாவிற்கு 6.99 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டை விட 16 சதவீதம் குறைவாகும்.
தாய்லாந்துக்கு 4.48 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டில் 6,32,734 டன்னாக இருந்ததை விட 25 சதவீதம் குறைவாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

