192% வளா்ச்சி கண்ட தங்கம் இறக்குமதி
இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துவருவதால், கடந்த மாா்ச் மாதத்தில் அதன் இறக்குமதி 192.13 சதவீதம் உயா்ந்து 447 கோடி டாலராக உள்ளது.
இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த மாா்ச் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 447 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024 மாா்ச் மாத இறக்குமதியான 153 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது 192.13 சதவீதம் அதிகம். 2024 ஜனவரியில் தங்கம் இறக்குமதி 268 பில்லியன் டாலராக (40.79 சதவீதம் உயா்வு) இருந்தது. அதே நேரம் 2024 டிசம்பரில் 55.39 சதவீதமும், பிப்ரவரியில் 62 சதவீதம் தங்கம் இறக்குமதி குறைந்தது.
2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டில், தங்கம் இறக்குமதி 27.27 சதவீதம் உயா்ந்து சுமாா் 5,800 கோடி டாலராக உள்ளது. இது 2023-24-ஆம் நிதியாண்டில் 4,554 கோடி டாலராக இருந்தது. அளவின் அடிப்படையில், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 757.15 டன்களாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 795.32 டன்களாக இருந்தது.
தங்கத்தின் மீது முதலீட்டாளா்களின் வலுவான நம்பிக்கையை இந்த இறக்குமதி வளா்ச்சி குறிக்கிறது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக தங்கத்தில் முதலீடு அதிகரித்தது, வங்கிகளின் அதிகரித்த தேவை, தங்கத்தின் விலை உயா்வு ஆகியவை இறக்குமதி வளா்ச்சியில் முக்கிய பங்கு வகித்தன.
வெள்ளி: கடந்த மாா்ச் மாதத்தில் வெள்ளி இறக்குமதி 85.4 சதவீதம் குறைந்து 11.93 கோடி டாலராக உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் அதன் இறக்குமதி 11.24 சதவீத வருடாந்திர சரிவைக் கண்டு 482 கோடி டாலராக உள்ளது.
மாா்ச் மாதத்தில் நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 2024 மாா்ச் மாதத்தைவிட 10.62 சதவீதம் உயா்ந்து சுமாா் 300 கோடி டாலராக உள்ளது. எனினும், 2024-25-ஆம் நிதியாண்டில் இது 8.84 சதவீதம் குறைந்து 2,982 கோடி டாலராக உள்ளது. இது, 2023-24-ஆம் நிதியாண்டில் 3,270 கோடி டாலராக இருந்தது.
தங்க இறக்குமதியில் ஏற்பட்டுள்ள வளா்ச்சியால், நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை (இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான வேறுபாடு) கடந்த மாா்ச் மாதத்தில் 2,154 கோடி டாலராக உயா்ந்துள்ளது. 2024-25 நிதியாண்டு முழுமைக்கும் இது 28,282 கோடி டாலா் என்ற உச்சத்தை எட்டியது.
நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை கடந்த டிசம்பா் காலாண்டில் 115 கோடி டாலராக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 சதவீதம்) உயா்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டில் 104 கோடி டாலராக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 சதவீதம்) இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தங்க இறக்குமதிக்கு ஸ்விட்சா்லாந்து மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. மொத்த இறக்குமதியில் இந்த நாடு சுமாா் 40 சதவீத பங்கு வகிக்கிறது. அதைத் தொடா்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் 16 சதவீதத்துக்கும் மேல் பங்கு வகிக்கிறது. தென் ஆப்பிரிக்கா சுமாா் 10 சதவீதம் பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் தங்கத்தின் பங்களிப்பு 8 சதவீதமாக உள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே இந்தியா தான் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்கிறது.