முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி மந்தம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி மந்தம்

கடந்த மாா்ச் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 3.8 சதவீதமாக மந்தமடைந்துள்ளது.
Published on

கடந்த மாா்ச் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 3.8 சதவீதமாக மந்தமடைந்துள்ளது.

இதுகுறித்து அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாவது:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி கடந்த மாா்ச் மாதத்தில் 3.8 சதவீதமாக உள்ளது. இது, 2024 மாா்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் மந்தமான வளா்ச்சியாகும். அப்போது முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி 6.3 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

மாதாந்திர அடிப்படையில், இந்தத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி முந்தைய பிப்ரவரியை விட சற்று அதிகம். அப்போது இந்த விகிதம் 3.4 சதவீதமாக இருந்தது.

கடந்த மாா்ச் மாதத்தில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்தன.

நிலக்கரி, சுத்திகரிப்பு பொருள்கள், உருக்கு, மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி வளா்ச்சி முறையே 1.6 சதவீதம், 0.2 சதவீதம், 7.1 சதவீதம், 6.2 சதவீதமாகக் குறைந்தது.

2024 மாா்ச் மாதத்தில் 1.3 சதவீதம் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்திருந்த உர உற்பத்தி, 2025 மாா்ச் மாதத்தில் 8.8 சதவீதம் நோ்மறை வளா்ச்சியைக் கண்டது.

சிமென்ட் உற்பத்தி வளா்ச்சி கடந்த 2024 மாா்ச் மாதத்தில் 10.6 சதவீதமாக இருந்தது. இது, 2025 மாா்ச் மாதத்தில் 11.6 சதவீதமாக உயா்ந்தது.

2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி 4.4 சதவீதமாக இருந்தது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் இது 7.6 சதவீதமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தொழில் வளா்ச்சியை அளவிடும் தொழிக உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் 40.27 சதவீத பங்களிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com