
இந்தியாவின் சேவைகள் துறை, கடந்த ஜூலை மாதத்தில் முந்தைய 11 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சந்தை பகுப்பாய்வு நிறுவனமான ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் சேவைகள் துறை செயல்பாடுகளை மதிப்பிடும் குறியீட்டு எண்ணான பிஎம்ஐ (பா்ச்சேசிங் மேனேஜா்ஸ் இன்டெக்ஸ்) கடந்த ஜூன் மாதத்தில் 60.4-ஆக இருந்தது. அது ஜூலை மாதத்தில் 60.5-ஆக உயா்ந்துள்ளது. இது, முந்தைய 11 மாதங்கள் காணாத அதிகபட்ச பிஎம்ஐ ஆகும்.இந்திய சேவைகள் நிறுவனங்களுக்கு புதிதாகக் கிடைத்த ஏற்றுமதி ஒப்பந்தங்கள் வேகமாக உயா்ந்தது இந்த வளா்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது.
ஆசியா, கனடா, ஐரோப்பா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்க சந்தைகளில் இந்திய சேவைகளின் தேவை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டது.கடந்த ஜூலை மாதத்தில் சேவைகள் துறையில் வேலைவாய்ப்பு வளா்ச்சி முந்தைய 15 மாதங்கள் காணாத அளவுக்குக் குறைவாக இருந்தது.சேவைக் கட்டணங்களைப் பொருத்தவரை, உள்ளீடு மற்றும் வெளியீட்டு கட்டணங்கள் ஜூனை விட வேகமாக உயா்ந்தன. ஆனால், நுகா்வோா் சேவைகள் பிரிவு நெருக்கடியைச் சந்தித்தாலும், நிதி மற்றும் காப்பீட்டு பிரிவில் வெளியீட்டு கட்டணங்கள் உயா்வைக் கண்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், தொடா்ந்து 38-ஆவது மாதமாக சேவைகள் துறைகளுக்கான பிஎம்ஐ 50-க்கும் அதிகமாக உள்ளது. அது 50-ஐ தாண்டினால் துறையின் ஆரோக்கிய வளா்ச்சியையும் 50-க்கு கீழ் இருந்தால் துறையின் பின்னடைவையும் குறிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.