
இந்தியாவின் மின்சார பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 93 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த ஜூலை மாதத்தில் 15,528 மின்சார பயணிகள் வாகனங்கள் இந்தியச் சந்தையில் விற்பனையாகின. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 93 சதவீதம் அதிகம். அப்போது மின்சார பயணிகள் வாகனங்களின் விற்பனை 8,037-ஆக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் மின்சார பயணிகள் வாகனப் பிரிவில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அந்த மாதத்தில் நிறுவனம் 6,047 மின்சார பயணிகள் வாகனங்களை விற்பனை செய்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த பயணிகள் வாகனச் சந்தையில் மின்சார வாகனங்களின் பங்கு 3 சதவீதத்தை எட்டியுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 1,02,973-ஆக இருந்தது. 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவு. அப்போது 1,07,655 மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின.
மதிப்பீட்டு மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனையில் முன்னிலை வகித்தது, 22,256 வாகனங்கள் விற்பனையாகின. ஒட்டுமொத்த இரு சக்கர வாகனங்களுக்கான சந்தையில் அந்தப் பிரிவு தனது 5.6 சதவீதப் பங்கை தக்கவைத்துக் கொண்டது.
2024 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் மின்சார மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை இந்த ஜூலையில் 9 சதவீதம் அதிகரித்து 69,146-ஆக உள்ளது.
இந்தப் பிரிவில் மஹிந்திரா குழுமம் 9,766 வாகனங்களுடன் முன்னிலை வகித்தது. மதிப்பீட்டு மாதத்தில் மின்சார வா்த்தக வாகனங்களின் விற்பனை 52 சதவீதம் அதிகரித்து 1,244-ஆக உள்ளது. இந்தப் பிரிவில் டாடா மோட்டாா்ஸ் 333 வாகனங்களுடன் முன்னிலை வகித்தது. மின்சார வாகனங்களுக்கான சந்தையில் வா்த்தக வாகனப் பிரிவின் பங்கு 1 சதவீதத்தைத் தாண்டியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.