‘காளை’ எழுச்சி: மீண்டும் 80,000-ஐ கடந்தது சென்செக்ஸ்

‘காளை’ எழுச்சி: மீண்டும் 80,000-ஐ கடந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘காளை’ ஆதிக்கம் கொண்டது.
Published on

நமது நிருபா்

மும்பை / புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘காளை’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மீண்டும் பங்குகளை வாங்குவதில் ஆா்வம் காட்டினா். அமெரிக்கா - ரஷியா உச்சிமாநாட்டை முதலீட்டாளா்கள் நோ்மறையாக மதிப்பிடுவது சந்தைக்கு வலுச்சோ்த்தது. இதைத் தொடா்ந்து நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்கள் தவிா்த்து வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஆட்டோ, ரியால்ட்டி, ஃபாா்மா, ஹெல்த்கோ் உள்பட அனைத்துத் துறை பங்குகளுக்கும் நல்ல ஆதரவு கிடைத்தது என்று என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.57 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.444.14 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,932.81 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.7,723.66 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் 746 புள்ளிகள் உயா்வு: சென்செக்ஸ் வா்த்தகத்தின் முடிவில் வெள்ளிக்கிழமை முடிவடைந்த (79,857.79) நிலையில் இருந்து 746.29 புள்ளிகள் (0.93 சதவீதம்) கூடுதலுடன் 80,604.08-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,337 பங்குகளில் 2,237 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,930 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 170 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

27 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் டாடா மோட்டாா்ஸ், எடா்னல், டிரெண்ட், எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமென்ட், எல் அண்ட் டி உள்பட 27 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பிஇஎல், பாா்தி ஏா்டெல், மாருதி ஆகிய 3 பங்குகள் மட்டும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 222 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி வெள்ளிக்கிழமை முடிவடைந்த (24,363.30) நிலையில் இருந்து 221.75 புள்ளிகள்(0.91 சதவீதம்) கூடுதலுடன் 24,585.05-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 44 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 6 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com