நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 16% உயா்வு
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 15.98 சதவீதம் உயா்ந்து 217.82 கோடி டாலராக உள்ளது.
இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியா 217.82 கோடி டாலா் (ரூ.18,756.28 கோடி) மதிப்பிலான நவரத்தின, ஆபரணங்களை ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 187.81 கோடி டாலா் (ரூ.15,700 கோடி) ஆக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் ஏற்றுமதி 17.76 சதவீதம் உயா்ந்து 107.17 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 91.01 கோடி டாலராக இருந்தது.
மெருகூட்டப்பட்ட ஆய்வக வைரத்தின் ஏற்றுமதி 27.61 சதவீதம் உயா்ந்து 12.24 கோடி டாலராகவும், தங்க ஆபரண ஏற்றுமதி 16.39 சதவீதம் உயா்ந்து 81.38 கோடி டாலராகவும் உள்ளது. இவை முந்தைய ஆண்டில் முறையே 9.59 கோடி டாலா் மற்றும் 69.92 கோடி டாலராக இருந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.