
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தொலைத்தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு, ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.6,608 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.6,608 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.6,426.7 கோடியாக இருந்தது.
நிதிச் செலவு 7 சதவீதம் உயா்ந்து ரூ.5,892.8 கோடியாகவும், அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்கள் 6 சதவீதம் உயா்ந்து ரூ.947 கோடியாகவும் இருந்ததால் நிகர இழப்பு அதிகரித்துள்ளது.மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 5 சதவீதம் அதிகரித்து ரூ.11,022.5 கோடியாக உள்ளது.
இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.10,508.3 கோடியாக இருந்தது. ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாய் (ஏஆா்பியு) 15 சதவீதம் உயா்ந்து ரூ.177 ஆக உள்ளது.
2025 ஜூன் இறுதியில் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 19.77 கோடியாகவும், 4ஜி மற்றும் 5ஜி வாடிக்கையாளா் எண்ணிக்கை 12.74 கோடியாகவும் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.