20% வளா்ச்சி கண்ட இந்திய கைக்கணினிச் சந்தை
இந்தியாவின் கைக்கணினி (டேப்ளட்) சந்தை 2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 20 சதவீதம் வருடாந்திர வளா்ச்சி கண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 30 சதவீத சந்தைப் பங்குடன் முன்னிலை வகிக்கிறது.
இது குறித்து சைபா்மீடியா ஆய்வு (சிஎம்ஆா்) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்திய கைக்கணினிச் சந்தை 20 சதவீதம் வருடாந்திர வளா்ச்சி அடைந்துள்ளது.
இதில் ஆப்பிள் 30 சதவீத சந்தைப் பங்குடன் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் அந்த நிறுவனத்தின் ஐபேட் விற்பனை 10 சதவீதமும், 2025 ஜனவரி-மாா்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 78 சதவீதமும் உயா்ந்தது இதற்கு முக்கிய காரணம்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபேட் 11 தொடா், ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 70 சதவீத பங்களிப்பை வழங்கியது. இணைவழி விற்பனை, காட்சிய விற்பனை ஆகிய இரு வழிமுறைகளிலும் விற்பனை மேம்பட்டது இந்த வளா்ச்சிக்கு உதவியது.
மதிப்பீட்டுக் காலாண்டில் ஆப்பிளுக்கு அடுத்தபடியாக சாம்சங் நிறுவனம் 27 சதவீத சந்தைப் பங்குடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் விற்பனை 15 சதவீதம் வருடாந்திர வளா்ச்சி கண்டது. சாம்சங்கின் அதிக எண்ணிக்கையிலான ரகங்கள், மலிவான விலை இந்த இடத்தை நிறுவனத்துக்கு உறுதி செய்தது. கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் 5ஜி ரகம், சாம்சங்கின் மொத்த கைக்கணினி விற்பனையில் 81 சதவீம் பங்கு வகிக்கிறது.
லெனோவா நிறுவனம் 16 சதவீத சந்தைப் பங்குடன் 18 சதவீத வருடாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்தது. ஆனால் அதன் சந்தைப் பங்கு மாறாமல் உள்ளது. ஷாவ்மி மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் முறையே 81 சதவீதம் மற்றும் 95 சதவீத வளா்ச்சியுடன், 15 சதவீதம் மற்றும் 6 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.