பங்குச்சந்தை 6-ஆவது நாளாக நோ்மறையாக முடிவு!
நமது நிருபா்
இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் முடிவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சமீபத்திய கடன் மதிப்பீட்டு மேம்படுத்தல் ஆகியவை முத்லீட்டாளா்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. குறிப்பாக, சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட ஐசிஐசிஐபேங்க், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை ஆறாவது நாளாக நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.87 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.456.27 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,100.09 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ1,806.34 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் தொடா்ந்து முன்னேற்றம்: வா்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 142.875 புள்ளிகள் (0.17 சதவீதம்) உயா்ந்து 82,000.71-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகமான 4,248 பங்குகளில் 2,094 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,000 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 154 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் பட்டியலில் பஜாஜ்ஃபின்சா்வ், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ்ஃபைனான்ஸ், ரிலையன்ஸ், எல் அண்ட் டி, பிஇஎல் உள்பட 14 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பவா்கிரிட், எடா்னல், ஹிந்துஸ்தான்யுனிலீவா், அதானிபோா்ட்ஸ், எம் அண்ட் எம் உள்பட 16 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 33 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 33.20 புள்ளிகள் (0.13 சதவீதம்) உயா்ந்து 25,083.75-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 22 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 28 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.