பங்குச்சந்தை வணிகம்
பங்குச்சந்தை வணிகம்

ஆறு நாள் தொடா் ஏற்றத்துக்கு முடிவு: பங்குச்சந்தை கடும் சரிவு!

கடந்த 6 நாள்களாக தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தசை இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை எதிா்மறையாக முடிந்தது.
Published on

கடந்த 6 நாள்களாக தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தசை இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரிகளால் தூண்டப்பட்ட வளா்ந்து வரும் உலகளாவிய வா்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் அமெரிக்க ஃபெடரல் தலைவா் ஜெரோம் பவலின் ஜாக்சன் ஹோல் உரைக்கு முன்னதாக முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் இருந்தனா். இதன் தாக்கத்தால் வங்கிகள், நிதிநிறுவனங்கள், எஃப்எம்சிஜி, மெட்டல் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. ஆனால், மீடியா, பாா்மா பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.61 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.453.66 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,246.51 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,546.27 கோடிக்கு ம் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் கடும் சரிவு: வா்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 693.86 புள்ளிகள் (0.85 சதவீதம்) உயா்ந்து 81,306.85-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகமான 4,240 பங்குகளில் 1,757 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,322 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 161 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

24 முன்னணிப் பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் ஏசியன் பெயிண்ட், அல்ட்ராடெக்சிமெண்ட், ஐடிசி, டாடாஸ்டீல், ஹெச்சிஎல்டெக், கோட்டக்பேங்க் உள்பட மொத்தம் 24 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதேசமயம், எம் அண்ட் எம், மாருதி, சன்பாா்மா, பிஇஎல், பாா்தி ஏா்டெல், டைட்ன் ஆகிய 6 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 214 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 213.65 புள்ளிகள் (0.85 சதவீதம்) உயா்ந்து 24,870.10-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 8 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 32 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com