சிபில் ஸ்கோர் அவசியமில்லை.. வங்கிகளுக்கு ஆர்பிஐ சொல்லும் அறிவுரை

முதல்முறை கடன்பெறுபவர்களுக்கு சிபில் ஸ்கோர் அவசியமில்லை என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
Published on
Updated on
2 min read

முதல்முறையாக கடன்பெற விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் அவசியமில்லை என்பதை மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, மக்களவையில் விளக்கம் அளித்துப் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, முதல் முறையாக கடன் கோரி விண்ணப்பிப்பவர்களின் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலோ அல்லது பூஜ்யமாக இருந்தாலோ, அந்த கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டாம் என்ற ஆர்பிஐயின் விதிமுறையை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

முதல்முறை கடன் பெற விண்ணப்பிப்பவர்களின் சிபில் ஸ்கோர் விவகாரம் குறித்து, மத்திய ரிசர்வ் வங்கியின் 2025, ஜனவரி 6ஆம் தேதி நாளிட்ட மிக முக்கிய வழிகாட்டு நெறிமுறை, கடன் வழங்கும் நிறுவனங்கள் தெளிவுபடுத்திக் கொள்வதற்கானதாக உள்ளதாகவும், அதில், முன்னதாக கடன் பெற்றதற்கான வரலாறு இல்லாத, முதல் முறை கடன் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு சிபில் ஸ்கோர் இல்லை என்பதை காரணம் காட்டி விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறது.

அது மட்டுமல்ல, கடன் பெற விண்ணப்பிப்போருக்கு, குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் என்ற ஒன்றை, ஆர்பிஐ இதுவரை நிர்ணயிக்கவில்ல என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்கள், தங்களது வணிக பரிந்துரைகள் மற்றும், நிறுவனத்தின் வாரியம் ஒப்புதல் அளித்த கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும், கடன் தகவல் அறிக்கை அளிக்கும் தரவுகளையும், விண்ணப்பதாரரின் மேலும் சில விவரங்களையும் பரிசீலனை செய்து, கடன் வழங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என்று மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார்.

சிபில் ஸ்கோர் என்றால்?

சிபில் ஸ்கோர் என்பது, மூன்று இலக்க எண்களைக் கொண்டது. ஒரு தனிநபரின் கடன் வரலாறு எவ்வாறு இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த சிபில் ஸ்கோர் அமையும். கடன் பெற்று தவணையை சரியாக செலுத்தி வருபவர்களுக்கு அதிக சிபில் ஸ்கோர் இருக்கும். தவணையை தவறி செலுத்தினால் சிபில் ஸ்கோர் குறையும். இதை எந்த தனிநபரும், நிறுவனங்களும் மாற்ற முடியாது.

ஒருவர், தனிநபர் கடன், தங்கக் கடன், வீட்டுக் கடன் போன்றவற்றை பல்வேறு வங்கிகளில் பெறுவதற்கு அடிப்படையாக இந்த சிபில் ஸ்கோர் அமைந்திருக்கும்.

எனவே, முதல் முறையாக கடன் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்த சிபில் ஸ்கோர் இருக்காது. அவர்களது சிபில் ஸ்கோர் பூஜ்யமாகவும் இருக்கலாம். எனவே, முதல் முறை கடன் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு சிபில் ஸ்கோர் பூஜ்யமாக இருந்தால் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டாம் என்றும், சிபில் ஸ்கோரை சோதித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், தனிநபர் ஒருவர், தன்னுடைய சிபில் ஸ்கோரை அறிந்து கொள்ள, கடன் விவர தகவல்களை அளிக்கும் நிறுவனங்கள் அதிகபட்சம் ரூ.100 வரை கட்டணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

Summary

The Union Finance Ministry has clarified that a minimum CIBIL score is not required for first-time loan applicants.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com