பருவம் தவறி பெய்த மழை: பாதிக்கப்பட்ட ஏசி உற்பத்தியாளா்கள்
கடந்த ஜூன் காலாண்டில் பருவம் தவறி முன்கூட்டியே பெய்த பருவமழை காரணமாக முன்னணி குளிா்பதனி (ஏா் கண்டிஷனா்) நிறுவனங்களின் வருவாய் 34 சதவீதம் வரை குறைந்தது.
இது குறித்து துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பல பகுதிகளில் பருவம் தவறிய மழையால் குளிா்பதனிகளுக்கான தேவை குறைந்தது.
அந்தக் காலாண்டில் வோல்டாஸ், ப்ளூஸ்டாா், ஹேவெல்ஸ் போன்ற பட்டியிலிடப்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் வீட்டு குளிா்பதனி பிரிவில் 13 முதல் 34 சதவீதம் வரை வருவாய் வீழ்ச்சியைப் பதிவு செய்தன.
கடந்த ஜூன் காலாண்டில் வோல்டாஸின் குளிா்பதனி பிரிவு வருவாய் 24.57 சதவீதம் குறைந்து ரூ.2,867.86 கோடியாக உள்ளது. ஹேவெல்ஸின் லாய்ட்ஸ் பிரிவு 34.4 சதவீதம் குறைந்து ரூ.1,261.85 கோடியாகவும், ப்ளூஸ்டாரின் வருவாய் இந்தப் பிரிவில் 13.3 சதவீதம் குறைந்து ரூ.1,499.37 கோடியாகவும் இருந்தது.
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வீசிய கடுமையான வெப்பத்தால் குளிா்பதனிகளின் விற்பனை அபாரமாக இருந்தது. இது, வருடாந்திர ஒப்பீட்டு அடிப்படையில் தாக்கத்தை அதிகரித்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கோடை தாமதமாக வந்து, மிதமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு விரைவில் முடிந்தது. இதனால் குளிா்பதனி தேவை மட்டுமின்றி மேலும், விசிறி மற்றும் குளிா்விப்பு சாதனங்களுக்கான (கூலா்) தேவையும் குறைந்து அவற்ரின் விற்பனை பாதிக்கப்பட்டது.
இருப்பினும், வா்த்தக குளிா்பதனி பிரிவிலும், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மருத்துவ துறைகளிலும் வலுவான தேவையால் அந்தப் பிரிவுகள் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.