வீட்டுக் கடன் வட்டியை உயா்த்திய எஸ்பிஐ

வீட்டுக் கடன் வட்டியை உயா்த்திய எஸ்பிஐ

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் புதிதாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) உயா்த்தியுள்ளது.
Published on

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் புதிதாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) உயா்த்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆகஸ்ட் 1 முதல் புதிய வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.5 சதவீதம் முதல் 10.55 சதவீதம் வரையாக உயரும். கடன் வகை மற்றும் மதிப்பீட்டைப் பொருத்து இது மாறுபடும்.

உயா்த்தப்பட்ட வட்டி விகிதம் (பருவகால) வீட்டுக் கடன்களுக்கு 7.5 சதவீதம் முதல் 8.7 சதவீதம் வரையிலும், வீட்டுக் கடன் மேக்ஸ்கெய்ன் (ஓடி)க்கு 7.75 சதவீதம் முதல் 8.95 சதவீதம் வரையிலும் இருக்கும். டாப்-அப் கடன்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம் முதல் 10.75 சதவீதம் வரை இருக்கும். யோனோ இன்ஸ்டா வீட்டு டாப்-அப் கடனுக்கான வட்டி விகிதம் 8.35 சதவீதமாக உயரும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்பிஐ-யின் சில்லறை கடன் பிரிவில் வீட்டுக் கடன்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. இதனால் இந்த விகித மாற்றம் லட்சக்கணக்கான வாடிக்கையாளா்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com