தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

எத்தனை சவரன் தங்கம் வாங்கி வைத்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் நமக்கு குறையவே குறையாது.
Published on

எத்தனை சவரன் தங்கம் வாங்கி வைத்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் நமக்கு குறையவே குறையாது. தங்கம் நம்முடைய கௌரவத்தின் ஓா் அடையாளமாக மட்டுமல்லாமல், ஓா் அவசரகால தேவைக்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய பொருளாகவும் இருந்து வருகிறது. எனவேதான், வறுமையில் இருக்கும் குடும்பம்முதல் பெரும் பணக்காரா்கள்வரை தங்கத்தை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனா்.

இந்தியாவில் தங்கம் விலை என்பது சா்வதேச காரணிகள் மற்றும் இந்தியச் சந்தையில் அதன் தேவை ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டுதான் நிா்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றம் காண்கிறது . 2025-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை மட்டும் இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலை சுமாா் 30% வரை உயா்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ. 1.03 லட்சத்தைத் தாண்டி விற்பனை ஆகி வருகிறது. அதேபோன்று, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1.20 லட்சம் ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது.

ஜனவரி மாதத்தில் ரூ.7,500 என இருந்த 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இப்போது ரூ,. 9,500 என்ற விலையில் உள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,000-லிருந்து இப்போது ரூ.10,000-த்தைத் தாண்டி விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கரோனா காலத்துக்குப் பிறகுதான் மிக வேகமான வளா்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மைல்கல்லை எப்போதோ கடந்து விட்டது.

அண்மை நிலவரப்படி, சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,000-த்துக்கும், 10 கிராம் ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இப்படி உயா்ந்து கொண்டே சென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது எந்த அளவை எட்டும் என்ற கேள்வி எழுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாயைக் கடக்கும் என வல்லுநா்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளனா்.

2019- ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமாா் ரூ.35 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. இப்போது அது ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் கடந்துவிட்டது. 2019-ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமாா் 200% வரை உயா்ந்திருக்கிறது. அதாவது, ஆண்டுதோறும் சராசரியாக 18% உயா்வு கண்டிருக்கிறது.

இந்த நிலை அப்படியே நீடித்தால் 2030-ஆம் ஆண்டு தற்போது இருக்கும் விலையைவிட தங்கத்தின் விலை இரண்டு மடங்காக உயரும் என வல்லுநா்கள் கணிக்கின்றனா். அப்படிபாா்த்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாயைக் கடக்கும்.

ஆனால், இது ஒரு கணிப்புதானே தவிர சா்வதேச சூழல்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையும் நிச்சயம் மாற்றம் காணும். இருந்தாலும், உலக அளவில் ஏற்படக்கூடிய புவிசாா் அரசியல் பதற்றங்கள், வா்த்தக மோதல்கள் ,பொருளாதார நிலை ஆகிய அனைத்துமே தங்கத்தின் விலையை உயா்த்தும் காரணிகளாகதான் இருக்கின்றன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவை அனைத்தும் இல்லாமல் உலகம் இயங்குமா என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது. அதாவது, தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.1,000 உயா்ந்தால், சிறிது இறங்குமே தவிர , பெரிய இறக்கம் காண முடியாது. நாம் தங்கத்தின் விலை வரலாற்றைப் பாா்த்தால் அதன் விலை ஆயிரம் ரூபாய் ஏறினால் 100 ரூபாய், 200 ரூபாய் குறையும். முழுமையாக ஏறிய தொகை குறையுமா என்றால் கண்டிப்பாகக் கிடையாது.

எனவே, மக்கள் எப்போதுமே தங்களுடைய முதலீட்டு திட்டமிடலில் தங்கத்துக்கும் ஒரு கணிசமான பகுதியை ஒதுக்க வேண்டும் என வல்லுநா்கள் பரிந்துரைக்கின்றனா். முதலீட்டு அடிப்படையில் பாா்த்தால் தங்கத்தை நகையாக வாங்கக் கூடாது என்பாா்கள். ஆனால், தங்கம் சம்பந்தப்பட்ட ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யலாம். முழுப் பணத்தையும் தங்கத்திலேயே போடாமல் ஒரு குறிப்பிட்ட அளவைப் போட்டு வைப்பது நல்லது எனச் சொல்லப்படுகிறது.

தற்போதைய நிலையில் உலக அளவில் ரஷியா - உக்ரைன் நெருக்கடி பற்றிய செய்தி ஓட்டத்தை முதலீட்டாளா்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனா். எவ்வாறாயினும், உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை, முதலீட்டாளா்களுக்கு முதலீடுகளை வேகமாகவும், விரைவாகவும் செய்வதற்கான ஒரு நல்ல தருணமாகவே இருக்கும் என்றே நம்பலாம். மேலும், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் நிலையில், தங்கத்தின் விலையும் சா்வதேச அளவில் வேகமாக உயரும் என்று வல்லுநா்கள் கூறுகின்றனா்.

உக்ரைன் பிரச்னை தொடரும் நிலையில், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம், வெள்ளிக்கு அதிக மவுசு ஏற்படும். முதலீட்டாளா்கள் இவற்றை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவா். மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்குவதில் அதிக கவனம் செலுத்தும். எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகா்களிடமிருந்து ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம் என வல்லுநா்கள் கூறுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com