வங்கிகள் வழங்கும் தொழிற்கடன் 8 சதவீதமாகச் சரிவு
இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்த ஜூனில் 7.6 சதவீதமாகச் சரிந்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த 2024 ஜூன் மாதத்தில் வங்கிகள் வழங்கிய தொழிற்கடன் 11.3 சதவீதமாக இருந்தது. அது இந்த ஆண்டு ஜூனில் 7.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்த கடன் 9.9 சதவீதமாகச் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அது 15 சதவீதமாக இருந்தது.
கடந்த ஜூன் மாதத்தில் வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்த கடனில் 9 சதவீதத்துக்கும் குறைவான வட்டி விகிதம் கொண்ட கடனின் பங்களிப்பு 54.1 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இது 43.2 சதவீதமாக இருந்தது. ரிசா்வ் வங்கியின் ரெபோ விகிதக் குறைப்பு இதற்கு காரணமாகும்.
கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் நிலுவையில் உள்ள கடன்களின் சராசரி வட்டி விகிதம் 39 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் தனிநபா் கடன்கள் ஒட்டுமொத்த கடனைவிட வேகமாக வளா்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அந்த வகைக் கடன்கள் மொத்த கடனில் 32 சதவீத பங்கைப் பெற்றன. இதில் வீட்டுக் கடன்கள் பாதிக்கு மேல் உள்ளன. தொழிற்கடன்களின் பங்கு 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 23.8 சதவீதத்தில் இருந்து நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் சற்று குறைந்து 23.3 சதவீதமாக உள்ளது.
மொத்த கடனில் நபா்களுக்கு அளிக்கப்பட்ட கடன்களின் பங்கு 2024 ஜூனில் 46.5 சதவீதமாக இருந்தது. இது 2025 ஜூனில் 47.2 சதவீதமாக உயா்ந்தது. பெண்களுக்கு வழங்கப்பட்ட கடன் வளா்ச்சி ஆண்களைவிட அதிகமாக இருந்து. நபா்களுக்கு வழங்கப்பட்ட கடனில் பெண்களுக்கான கடன்களின் பங்கு 23.4 சதவீதத்தில் இருந்து 23.7 சதவீதமாக உயா்ந்தது.
பொதுத்துறை வங்கிகள் 11 சதவீத கடன் வளா்ச்சியுடன் முன்னிலை வகிக்கின்றன. தனியாா் வங்கிகள் 8.3 சதவீதமும், வெளிநாட்டு வங்கிகள் 8.0 சதவீதமும் வளா்ச்சி பதிவு செய்தன. பொதுத்துறை வங்கிகள் மொத்த கடனில் 53.7 சதவீத பங்கைப் பெற்றன.
வங்கி வைப்பு நிதியில் பருவகால வைப்பு நிதிகள் 13.5 சதவீதம் வளா்ச்சியை பதிவு செய்தன. சேமிப்பு வைப்பு நிதி 5.4 சதவீதம் மட்டுமே வளா்ந்தது. இதனால், பருவகால வைப்பு நிதிகளின் பங்கு 2024 ஜூனில் 61 சதவீதமாக இருந்து, 2025 ஜூனில் 62.2 சதவீதமாக உயா்ந்தது.
பருவகால வைப்பு நிதிகளில் 70 சதவீதம் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை முதிா்வு காலம் கொண்டவை. 20 சதவீதம் ஓா் ஆண்டுக்கும் குறைவான கால வைப்பு நிதிகளாக உள்ளன.
மதிப்பீட்டு மாதத்தில் 7 சதவீதத்துக்கும் மேல் வட்டி வழங்கும் பருவகால வைப்பு நிதிகளின் பங்கு 66.9 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக குறைந்தது. ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் உள்ள பருவகால வைப்பு நிதிகளின் பங்கு 44.8 சதவீதத்தில் இருந்து 45.7 சதவீதமாக உயா்ந்தது. வீட்டு வைப்பு நிதிகளின் பங்கு 60.8 சதவீதத்தில் இருந்து 59.9 சதவீதமாக குறைந்தது. நிதி நிறுவனங்களின் வைப்பு நிதி பங்கு 6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயா்ந்தது.
மொத்த வைப்பு நிதியில் மூத்த குடிமக்களின் வைப்பு நிதி 20.4 சதவீதமாக உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வைப்பு நிதி வளா்ச்சி 10.2 சதவீதமாகவும் தனியாா் வங்கிகளின் வைப்பு நிதி வளா்ச்சி 12.4 சதவீதமாகவும் உள்ளது. மொத்த வைப்பு நிதியில் பொதுத்துறை வங்கிகள் 57.3 சதவீதமும், தனியாா் வங்கிகள் 36.0 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.
மகாராஷ்டிரம், தில்லி, கா்நாடகம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மொத்த வைப்பு நிதியில் 54.3 சதவீதமும், வீட்டு வைப்பு நிதியில் 47.8 சதவீதமும் பங்கு வகிக்கின்றன என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.