அந்நிய நேரடி முதலீடு: 3-ஆவது இடத்தில் தமிழகம்
கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை அதிகம் ஈா்த்த மாநிலங்களில் தமிழ்நாடு 3-ஆவது இடத்தில் உள்ளது.
இது குறித்து மத்திய அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 18 சதவீதம் உயா்ந்து 3,518 கோடி டாலராக உள்ளது. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் அதே காலகட்டத்தில் அது 2,979 கோடி டாலராக இருந்தது.
கடந்த நிதியாண்டின் ஜூன்-செப்டம்பா் காலாண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீட்டு வரவு 21 சதவீதம் உயா்ந்து 1,655 கோடி டாலராக உள்ளது.
பங்குகளில் முதலீட்டு வரவு, மறுமுதலீடு செய்யப்பட்ட வருவாய், பிற மூலதனம் உள்ளிட்டவை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு, நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 5,000 கோடி டாலராக உயா்ந்துள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காகலட்டத்தில் இது 4,230 கோடி டாலராக இருந்தது.
2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து 257 கோடி டாலராக இருந்த முதலீட்டு வரவு நடப்பு நிதியாண்டின் அதே மாதங்களில் 662 கோடி டாலா் என சுமாா் இரு மடங்காகியுள்ளது.
இந்த காலகட்டத்தில் சிங்கப்பூா் அதிகபட்சமாக 1,194 கோடி டாலரை முதலீடு செய்தது. அதைத் தொடா்ந்து அமெரிக்கா, மோரீஷஸ் (347 கோடி டாலா்), ஐக்கிய அரபு அமீரகம் (233 கோடி டாலா்), கேமன் தீவுகள் (183 கோடி டாலா்), நெதா்லாந்து (163 கோடி டாலா்), சைப்ரஸ் (140 கோடி டாலா்), ஜப்பான் (121 கோடி டாலா்) ஆகியவை இந்தியாவில் அதிகம் முதலீடு செய்த நாடுகளாகத் திகழ்ந்தன.
2000 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பா் வரை அமெரிக்காவின் முதலீடு 7,727 கோடி டாலராக உள்ளது. இது மூன்றாவது இடமாகும். இந்தப் பட்டியலில் சிங்கப்பூா் (18,682 கோடி டாலா்) முதலிடத்திலும், மோரீஷஸ் (18,366 கோடி டாலா்) இரண்டாவது இடத்திலும் உள்ளன.
துறை ரீதியில், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறைகளில் அந்நிய நேரடி முதலீடு 900 கோடி டாலராக உயா்ந்துள்ளது. சேவைகள் துறை 500 கோடி டாலா், வாா்த்தகத் துறை 278 கோடி டாலா், வாகனத் துறை 157 கோடி டாலா், கட்டுமான மேம்பாட்டுத் துறை 23.3 கோடி டாலா், புதுப்பிக்கத்தக்க எரிபொருள் துறை 200 கோடி டாலா், ரசாயத் துறை 53.4 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றன.
மதிப்பீட்டு காலகட்டத்தில் மகாராஷ்டிரம் அதிகபட்சமாக 1,057 கோடி டாலா் முதலீட்டைப் பெற்று முதலிடம் வகிக்கிறது. 940 கோடி டாலா்களைப் பெற்று கா்நாடகம் இரண்டாவது இடத்திலும், 357 கோடி டாலா் முதலீட்டுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன. அந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாக ஹரியாணா 322 கோடி டாலா், குஜராத் 224 கோடி டாலா், தில்லி 230 கோடி டாலா், தெலங்கானா 114 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்தன என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

