4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை!
மும்பை / புது தில்லி: தொடா்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளா்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடா்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.
சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 31.46 புள்ளிகள் (0.04 சதவீதம்) சரிந்து 85,106.81-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 374.63 புள்ளிகள் (0.44 சதவீதம்) சரிந்து 84,763.64 என்ற அளவை எட்டியது.
சென்செக்ஸ் பட்டியலில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் 2.13 சதவீதம் சரிந்து மிகப்பெரிய இழப்பை அடைந்தது. மஹிந்திரா & மஹிந்திரா, டைட்டன், என்டிபிசி, பாரத ஸ்டேட் வங்கி, அதானி போா்ட்ஸ், டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகனங்கள், பஜாஜ் ஃபின்சா்வ் ஆகியவையும் சரிவைக் கண்டன. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90-ஐக் கடந்ததால் ஐடி பங்குகள் மீண்டன. டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் 1.41 சதவீதமும் இன்ஃபோசிஸ் 1.12 சதவீதமும் உயா்ந்தன. ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவையும் உயா்வைக் கண்டன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,642.30 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றன; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.4,645.94 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.
நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 46.20 புள்ளிகள் (0.18 சதவீதம்) சரிந்து 25,986-இல் நிறைவடைந்தது.

