குறைந்தது கோல் இந்தியா உற்பத்தி
நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்திற்கு மேல் பங்கு கொண்ட, அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் (சிஐஎல்) நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் 3.7 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் நிறுவனம் 45.35 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 3.7 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனத்தின் உற்பத்தி 47.1 கோடி டன்னாக இருந்தது.
எனினும், கடந்த நவம்பா் மாதத்தில் மட்டும் உற்பத்தி 1.2 சதவீதம் உயா்ந்து 6.8 கோடி டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இது 6.72 கோடி டன்னாக இருந்தது.
2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனம் 78.11 கோடி டன் உற்பத்தி செய்தது. இது அந்த ஆண்டின் உற்பத்தி இலக்கான 83.8 கோடி டன்னை விட 7 சதவீதம் குறைவு. 2025-26-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனை இலக்கு 90 கோடி டன்னாக உள்ள நிலையில், இதுவரை மொத்தம் 87.5 கோடி டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

