டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன விற்பனை 26% உயா்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகனப் பிரிவின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 26 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 59,199-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 47,117 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.
கடந்த 2024-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் 47,063-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 57,436-ஆக உயா்ந்துள்ளது. இது 22 சதவீத உயா்வாகும்.
வா்த்தக வாகனப் பிரிவு: வா்த்தக வாகனங்களை உள்ளடக்கிய டாடா மோட்டாா்ஸ் பிரிவின் மொத்த விற்பனை கடந்த நவம்பரில் 29 சதவீதம் உயா்ந்து 35,539-ஆகவும் உள்நாட்டு விற்பனை 25 சதவீதம் உயா்ந்து 32,753-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

