

புதுதில்லி: அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் 25 அடிப்படைப் புள்ளி குறைப்பால் ஏற்பட்ட சாதகமான உலகளாவிய நிலவரங்களுக்கு மத்தியில், இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகள் கடந்த 3 நாள் தொடர் சரிவிலிருந்து மீண்டு இன்று உயர்வுடன் நிறைவடைந்தன.
மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, இந்திய குறியீடுகள் முதல் பாதியில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் மத்திய நேர வர்த்தகத்தில் ஏற்பட்ட கொள்முதலால், இன்றைய அதிகபட்ச விலைக்கு அருகில் செல்ல இது உதவியது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 426.86 புள்ளிகள் உயர்ந்து 84,818.13 ஆகவும், நிஃப்டி 140.55 புள்ளிகள் உயர்ந்து 25,898.55 புள்ளிகளாக நிலைபெற்றது.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.8% உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.5% அதிகரித்தன.
சென்செக்ஸில் எடர்னல், டாடா ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், மாருதி சுசுகி இந்தியா, சன் பார்மாசூட்டிகல்ஸ், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி வங்கி, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், இன்போசிஸ், டிரென்ட், மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை உயர்ந்தும் அதே வேளையில் ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், பவர்கிரிட், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் டைட்டன் ஆகியவை சரிந்தன.
நிஃப்டி-யில் கோடக் மஹிந்திரா வங்கி, எடர்னல், ஜியோ ஃபைனான்சியல், டாடா ஸ்டீல், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும், அதே வேளையில் பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்டவை சரிந்து முடிவடைந்தன.
அனைத்து துறைசார் குறியீடுகளும் இன்று உயர்ந்து முடிவடைந்தன. ஆட்டோ, தகவல் தொழில்நுட்பம், பார்மா, டெலிகாம், பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, உலோகம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் 0.5 முதல் 1% வரை உயர்ந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், பேயர் கிராப் சயின்ஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதால் டிசிஎம் ஸ்ரீராம் பங்குகள் 4% அதிகரித்தன. ரூ.407.5 கோடி மதிப்புள்ள ஆர்டர் உறுதிபடுத்தியதால் சக்தி பம்ப்ஸ் பங்குகள் 12% உயர்ந்தன. நீரிழிவு மருந்தை அறிமுகப்படுத்தியதால் சிப்லா பங்குகள் 1.5% உயர்ந்தன.
ஐபி ரூட்டிங் தயாரிப்புகள் விநியோக ஆர்டரின் அடிப்படையில் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் பங்குகள் 1.3% உயர்ந்தன. ஆரியன்-ஏஐ செயலியை அறிமுகப்படுத்தியதால் ஆரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் பங்குகள் 8% உயர்ந்தன. ரூ.18.78 கோடி மதிப்புள்ள நடுவர் தீர்ப்பு எம்.பி.எல் உள்கட்டமைப்பு நிறுவனத்துக்கு சாதகமானதால் அதன் பங்குகள் 7% அதிகரிப்பு.
முன்மொழியப்பட்ட முன்னுரிமை பங்குகளை திரும்ப பெறுவதால் ஹப்டவுன் பங்குகள் 9% சரிந்தன. ஃபெட் வட்டி விகிதம் குறைப்புக்குப் பிறகு வெள்ளி புதிய உச்சத்தை எட்டியதால் இந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் 2% உயர்ந்தன.
பிஏஎஸ்எஃப், வேதாந்த் ஃபேஷன்ஸ், ஸ்டெர்லிங் வில்சன், ப்ளூ டார்ட், டிரென்ட், பிரமல் பார்மா, சிஜி நுகர்வோர், என்சிசி, பேஜ் இண்டஸ்ட்ரீஸ், பிசிபிஎல் கெமிக்கல், டிக்சன் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார குறைந்த விலையை பதிவு செய்தன.
ராம்கோ சிஸ்டம், எசாப் இந்தியா, ஐஷர் மோட்டார்ஸ், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல், கம்மின்ஸ் இந்தியா, ஜம்னா ஆட்டோ, க்யூபிட், உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.22% சரிந்து, பேரல் ஒன்றுக்கு 61.45 டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.