

மும்பை: உலகளாவிய சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கும், தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிதி மற்றும் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மையால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தக நேரத்தின் போது, சென்செக்ஸ் 427.34 புள்ளிகள் சரிந்து 84,840.32 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 54.30 புள்ளிகள் சரிந்து 85,213.36 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 19.65 புள்ளிகள் சரிந்து 26,027.30 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி, அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ட்ரென்ட், எச்.சி.எல் டெக், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.
நிஃப்டியில் இன்டர்குளோப் ஏவியேஷன், ஐடிசி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், எச்யுஎல், டிரென்ட் ஆகியவை பங்குகள் உயர்ந்த நிலையில் ஓஎன்ஜிசி, எம்&எம், எச்டிஎஃப்சி லைஃப், ஐஷர் மோட்டார்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
துறை ரீதியாக, பொதுத்துறை வங்கி, ஊடகம், ஐடி, எஃப்எம்சிஜி, நுகர்வோர் சாதனங்கள் 0.3 முதல் 1% வரை உயர்ந்த நிலையில் ஆட்டோ, பார்மா, டெலிகாம் உள்ளிட்ட பங்குகள் 0.5 முதல் 1% வரை சரிந்தன.
தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் பலவீனமான ரூபாய் ஆகியவை இந்திய பங்குச் சந்தைகளை ஒரு குறுகிய வரம்பிற்குள் தக்கவைத்துள்ள நிலையில், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த தெளிவு ஏற்படும் வரை இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கத்தில் தொடரும்.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ.1,114.22 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,868.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், துரந்தர் புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை உருவாக்கி வருவதால், பிவிஆர் ஐனாக்ஸ் பங்குகள் 3% உயர்ந்தன. பிளாக் டீல்களில் 4.25 கோடி பங்குகள் கைமாறிய நிலையில் ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் 9% உயர்ந்தன.
வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறித்த தெளிவுபடுத்தலுக்குப் பிறகு ரெஃபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 17% உயர்ந்தன. நீண்ட கால விநியோக ஒப்பந்தம் கையெழுத்தானதால் எலைட்கான் இன்டர்நேஷனல் பங்குகள் 5% உயர்ந்தன.
பெட்ரோநெட் எல்என்ஜி, ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங், ஷீலா ஃபோம், வெராண்டா லேர்னிங், படேல் இன்ஜினியரிங், பனோரமா ஸ்டுடியோ, டிசிபிஎல் பேக்கேஜிங் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார குறைந்த அளவை பதிவு செய்தது.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, அசோக் லேலேண்ட், ஃபெடரல் வங்கி, வேதாந்தா, ஹிந்துஸ்தான் ஜிங்க், முத்தூட் ஃபைனான்ஸ், நால்கோ, ஹிந்துஸ்தான் காப்பர், வோடபோன் ஐடியா, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தை எட்டியது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன.
சர்வதேச அளவில் ப்ரென்ட் கச்சா எண்ணெய், 0.15% உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 61.21 அமெரிக்க டாலராக உள்ளது.
இன்று பட்டியலிடப்பட்ட புதிய பங்குகள்:
தனது ஐபிஓ விலையை விட 38% அதிகமான பிரீமியத்துடன் வலுவான அறிமுகத்தை செய்த பிறகு, கரோனா ரெமெடீஸ் நிறுவனத்தின் பங்குகள் சற்று சரிந்து ரூ.1,422.20 என்று வர்த்தகத்தை நிறைவு செய்தன.
டிசம்பர் 8 முதல் 10 வரை காலத்தில், சந்தையில் அதன் பங்கு வெளியீட்டிற்கு இரண்டு மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், பங்குச் சந்தைகளில் மந்தமான அறிமுகத்தை தொடர்ந்து, வேக்ஃபிட் நிறுவனத்தின் பங்குகள் ரூ.190.65 என்ற விலையில் சரிவுடன் நிறவடைந்தன.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.90.74 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.