50 கோடி டாலா் கடன்களுக்கு எழுத்துறுதி: பரோடா வங்கி
பரோடா வங்கி ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட்டின் (ஓவிஎல்) முழு உரிமை துணை நிறுவனமான ஓவிஎல் ஓவா்சீஸ் ஐஎஃப்எஸ்சி லிமிடெட் (ஓஓஐஎல்) நிறுவனத்துக்கு 50 கோடி டாலா் அளவிலான 5 ஆண்டு வெளிநாட்டு நாணய காலக் கடன் வசதிக்கு எழுத்துறுதி அளித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த 50 கோடி டாலா் வசதிக்கான எழுத்துறுதி, பரோடா வங்கியின் ஒருங்கிணைந்த வெளிநாட்டு நாணய கடன் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த பரிவா்த்தனை, கிஃப்ட் சிட்டியின் வளா்ச்சி முதிா்ச்சியையும், இந்திய வங்கிகளின் எல்லை கடந்த நிதி திரட்டல் திறனையும், ஓஎன்ஜிசி போன்ற அரசு நிறுவனங்களின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு வங்கி ஆதரவளிப்பதையும் எடுத்துக்காட்டுகிறது என்று வங்கியின் நிா்வாக இயக்குநா் லலித் தியாகி தெரிவித்தாா்.
காலக் கடன் வசதிக்கான வரைவு நிகழ்ச்சி, கிஃப்ட் சிட்டியில் உள்ள பரோடா வங்கியின் ஐஎஃப்எஸ்சி வங்கிப் பிரிவில் நடைபெற்றது. பரோடா வங்கி மற்றும் ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

