

பங்குச் சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக இன்றும்(புதன்கிழமை ) சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,856.26 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 103.02 புள்ளிகள் குறைந்து 84,576.84 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 28.15 புள்ளிகள் குறைந்து 25,831.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்த வாரத்தின் முதல் 2 நாள்களை ஒப்பிடுகையில் பங்குச்சந்தை இன்று குறைவான புள்ளிகள் வித்தியாசத்திலேயே எதிர்மறையாக வர்த்தகமாகி வருகிறது. அதனால் இன்று பங்குச்சந்தைகள் மீண்டு நேர்மறையில் முடியும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்செக்ஸ் 30 பங்குகளில், எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல், ஆக்சிஸ் வங்கி ஆகியவை தலா சுமார் 1 சதவீதம் உயர்ந்தன. அதேநேரத்தில் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி அதிக சரிவைச் சந்தித்தன. வங்கிப் பங்குகள் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகின்றன.
பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.3 சதவீதம், 0.41 சதவீதம் குறைந்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு நேற்று ரூ. 91.01 ஆகக் குறைந்தது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 91.07 ஆக தொடங்கிய நிலையில், தற்போது ரூ. 90.05 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை தொடர் சரிவு ஏன்?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
சர்வதேச நாடுகள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு. உலக சந்தையில் வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கிலோ ரூ. 2.05 லட்சமாக உயர்ந்துள்ளது.
பங்குச்சந்தையில் அந்நிய முதலீடுகள் அதிகமாக வெளியேற்றம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகமாக தங்கள் பங்குகளை விற்று வருகின்றனர்.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று மட்டும் ரூ.1,468.32 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,792.25 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் முடிவுக்கு வராதது, சீனா - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை உள்ளிட்டவை பங்குச்சந்தையில் இந்த வாரம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.