5 புதிய மின்சார காா்கள்: டாடா மோட்டாா்ஸ் அறிவிப்பு
வரும் 2029-30-ஆம் நிதியாண்டுக்குள் அவின்யா உள்ளிட்ட ஐந்து புதிய மின்சார வாகன ரகங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவனம் (டிஎம்பிவி) தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டில் தொடா்ந்து வளந்துவரும் மின்சார வாகன சந்தையில் 45-50 பங்குடன் சந்தையில் ஆதிக்கத்தைத் தக்கவைக்கும் நோக்கில், அவின்யா பிரீமியம் வரிசை உள்ளிட்ட ஐந்து புதிய மின்சார வாகன ரகங்களை 2029-30-ஆம் நிதியாண்டுக்குள் அறிமுகப்படுத்த உள்ளோம். மின்சார வாகனப் பிரிவு நடவடிக்கைகளுக்காக ரூ.16,000 முதல் ரூ.18,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் 10 லட்சம் சாா்ஜிங் மையங்களை அமைப்பதும் அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் மின்சார பயணிகள் வாகனங்களில் சுமாா் மூன்றில் இரு பங்கை (66 சதவீதம்) விற்பனை செய்து, இந்தப் பிரிவில் டிஎம்பிவி ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது டியோகோ.இவி, பஞ்ச்.இவி, நெக்ஸான்.இவி, கா்வ்.இவி, ஹாரியா்.இவி ஆகிய மின்சார வாகன ரகங்களை டிஎம்பிவி நிறுவனம் தயாரித்துவருகிறது.

